ஏமன் நாட்டு முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேஹ் ‘கொல்லப்பட்டார்’

ஏமன் நாட்டின் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேஹ், ஹூதி கிளர்ச்சியாளர்களுடனான மோதல்களில் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

உள்துறை அமைச்சகத்தை மேற்கோள் காட்டும் ஹூதி அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் அல் மஸிரா தொலைக்காட்சி, “துரோகம் செய்பவர்களின் நெருக்கடி முடிவிற்கு வந்தது, அதன் தலைவர் கொல்லப்பட்டார்” என்று அறிவித்தது.

சலேஹ்வின் பொது மக்கள் காங்கிரஸ் கட்சியும் அவர் உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்துள்ளது.

தலையில் பலத்த காயத்துடன் இருக்கும் சலேஹ்வைப் போன்று தோற்றமளிப்பவரின் சடலம், இணையத்தில் வெளியாகும் படங்கள் மற்றும் காணொளிகளில் பார்க்க முடிகிறது.

கடந்த வாரம் வரை, சலேயின் ஆதரவாளர்கள் ஹூதி இயக்கத்துடன் இணைந்து ஏமனின் தற்போதைய அதிபர் அப்த்ரபுத் மன்சூர் ஹாதிக்கு எதிராக போராடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், நீண்ட அரசியல் பதற்றம் மற்றும் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் உள்ள தலைநகர் சனாவில் உள்ள மசூதியை டார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது தொடர்பான மோதலில் கடந்த புதன்கிழமை முதல் 125 பேர் கொல்லப்பட்டனர், 238 பேர் காயமடைந்தனர்.

கடந்த வாரம், ஹாதி அரசுக்கு ஆதரவாக, சலேஹ் தெரிவித்த கருத்துக்கள், ஹூதி அமைப்பினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. -BBC_Tamil