ஜெருசலேம் சர்ச்சை: அமெரிக்க முடிவுக்குப் பல நாடுகள் எதிர்ப்பு

சர்வதேச எதிர்ப்பையும் மீறி, ஜெருசலேத்தை இஸ்ரேல் தலைநகரமாக அறிவித்த அமெரிக்காவின் முடிவுக்கு சௌதி அரேபியா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் டிரம்பின் இந்த அறிவிப்பு “நியாயமற்ற மற்றும் பொறுப்பற்ற” செயல் என்று தெரிவித்துள்ளது.

ஆனால், இது ஒரு “வரலாற்று சிறப்புமிக்க நாள்” என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டியுள்ளார்.

‘இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம்’: டிரம்ப்பின் அறிவிப்பில் என்ன முக்கியத்துவம்?

டிரம்பின் இந்த அறிவிப்பு, பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்த அமெரிக்க கொள்கைகளை மாற்றியமைத்துள்ளது. ஜெருசலேம் குறித்த சர்ச்சை இஸ்ரேல் மற்றும் பாலத்தீனர்கள் இடையே பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.

அமெரிக்காவின் இந்த முடிவையடுத்து, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் 15 நாடுகளில், 8 நாடுகள் இந்த வார இறுதியில் அவசர கூட்டத்தை கூட்ட முடிவு செய்துள்ளன.

உலகம் என்ன சொல்கிறது?

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கு உதவாத அமெரிக்காவின் இந்த முடிவோடு மாறுபடுவதாக தெரீசா மே தெரிவித்துள்ளார். இந்த நகர்வை தங்கள் நாடுகள் ஆதரிக்கவில்லை என்று பிரான் அதிபர் இம்மானுவல் மக்ரோங்கும், ஜெர்மன் அதிபர் ஏங்கெலா மெர்க்கெலும் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைத் தூதுவர் ஃபெடரிகா மொகெரினி இந்த நடவடிக்கையை ‘பெரும் கவலைக்குரியது’ என்று வருணித்துள்ளார்.

“பெரும் மன உளைச்சல் ஏற்படுத்தும் தருணம் இது” என்று கூறிய ஐ.நா. தலைமை செயலாளர் ஆண்டானியோ கட்டரஸ் இரு தேசக் கொள்கைக்கு மாற்று இல்லை என்று தெரிவித்தார்.

பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாசின் ஃபடா கட்சி இது குறித்து ஐ.நா.விடம் முறையிடப்போவதாகக் கூறியுள்ளது. இஸ்லாமியவாதக் குழுவான ஹமாஸ் புதிய கிளர்ச்சி ஒன்றுக்கு அறைகூவல் விடுத்துள்ளது.

துருக்கியின் இஸ்தான்புல் நகரின் அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாகப் போராட்டம் வெடித்தது. ஜோர்டான் தலைநகர் அம்மானிலும் போராட்டம் வெடித்தது. இயேசு கிறிஸ்துவின் பாரம்பரியப் பிறப்பிடமான, மேற்குக் கரையில் உள்ள பெத்லஹேமில் கிறிஸ்துமஸை ஒட்டி ஏற்றப்பட்ட மின் விளக்குகளை பாலத்தீனியர்கள் அணைத்தனர்.

என்ன முக்கியத்துவம்?

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக வெளியான அமெரிக்காவின் அறிவிப்பு, ஜெருசலேம் தொடர்பான நிலைப்பாட்டின் மீது சர்வதேச சமூகத்தின் பார்வைக்கும், அமெரிக்காவுக்கும் இடையே இடைவெளியை அதிகரித்துள்ளது..

பாலத்தீனியர்கள் கிழக்கு ஜெருசலேம் தங்களின் எதிர்கால அரசின் தலைநகரமாகக் கூறுகின்றனர். மேலும், 1993 ஆண்டு நடந்த இஸ்ரேல்-பாலத்தீனிய சமாதான உடன்படிக்கைகளின்படி, அதன் இறுதி நிலை சமாதானப் பேச்சுவார்த்தைகளின் கடைசி கட்டங்களில் விவாதிக்கப்பட வேண்டும்.

ஜெருசலேம் மீது இஸ்ரேலின் இறையாண்மை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படவில்லை.

இதுவரை அனைத்து நாடுகளும் அவிவ் நகரில்தான் தங்கள் தூதரகங்களை பராமரிக்கின்றன.

யூத, இஸ்லாம் மற்றும் கிறித்துவம் ஆகிய மூன்று முக்கிய மதநம்பிக்கைகளுக்கும் நெருக்கமான புனித தளங்கள் ஜெருசலேம் நகரில் அமைந்துள்ளது.

பழைய நகரை உள்ளடக்கிய கிழக்கு ஜெருசலேத்தை , 1967 ஆம் ஆண்டில் நடந்த 6 நாள் போர் முடிந்த பின்னர் இஸ்ரேல் இணைத்தது. ஆனால், இது சர்வதேச அளவில் இஸ்ரேலின் பகுதியாக அங்கீகரிக்கப்படவில்லை.

டிரம்ப் கூறியது என்ன?

அமெரிக்காவின் நலனை கருத்தில் கொண்டும் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்துக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த முடிவை எடுத்ததாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

அதே நேரத்தில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்தவும், நிரந்தர தீர்வுக்கும் வழிகாட்டுவதற்கும் இந்த நடவடிக்கை உதவிகரமாக இருக்கும் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

‘இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேம்’ : டிரம்ப் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இஸ்ரேலும், பாலத்தீனர்களும் ஒப்புதல் அளித்தால், இரு தேச தீர்வு திட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்காவின் நலனை கருத்தில் கொண்டும் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்துக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.

‘வரலாற்று சிறப்புமிக்க நாள்’

டிரம்ப்பின் அ றிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று கூறினார், மேலும் இஸ்ரேல் அதிபர் டிரம்பிற்கு மிகவும் நன்றியுடையதாக இருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

“மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஜெருசலேம் எங்கள் நம்பிக்கைகள், கனவுகள் மற்றும் பிரார்த்தனைகளின் மையமாக இருந்தது,” என்று அவர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டார்.

இதனிடையே, பாலத்தீன தலைவர் அப்பாஸ் தனது முன் பதிவுசெய்யப்பட்ட தொலைக்காட்சி உரையில் ஜெருசலேம்தான் பாலத்தீன அரசின் என்றென்றும் நீடித்து நிலைக்கும் தலைநகர் என்று குறிப்பிட்டுள்ளார்.

-BBC_Tamil