கலிஃபோர்னியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயால், சுமார் 2 லட்சம் குடும்பங்கள் அப்பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
புதிய இடங்களில் தீப்பிழம்பு பரவியதையடுத்து, 10 ஏக்கரில் இருந்து 4,100 ஏக்கர்களுக்கு சில மணி நேரங்களிலேயே காட்டுத்தீ மிக வேகமாக பரவியது. இதனால், சான் டியாகோவில் அவசரகால நிலையை ஆளுநர் ஜெர்ரி ப்ரவுன் அறிவித்தார்.
இதுவரை மூன்று தீயணைப்பு வீரர்கள் காயமடைந்துள்ளனர் மற்றும் சுமார் 500 கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.
வென்சுரா நகரத்தில் தீ பரவியிருந்த பகுதியில் ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
ஆனால் அந்தப் பெண், காட்டுத்தீயால் அல்லாமல் ஒஜாய் நகரத்தில் நடந்த கார் விபத்தில் இறந்திருக்கக்கூடும் என வென்சுரா கன்ட்ரி ஸ்டார் செய்தித்தாளிடம் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
சுமார் 5,700 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திங்கள்கிழமை தீ பரவத் தொடங்கியதில் இருந்து வென்சுராவில் எரிந்துகொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய தீ 180 சதுர மைல்கள் (466 சதுர கி.மீ) பரப்பளவை சாம்பலாக்கி பசிபிக் கடலோரம் வரை பரவியுள்ளது. இதுவரை 430 கட்டடங்களை இது சேதப்படுத்தி உள்ளதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுற்றியுள்ள மலைப்பகுதிகளை இத்தீப்பிழம்பு எரித்து வருவதாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைப்பதில் ஈடுபட்டிருப்பதாகவும் ஒஜாயில் உள்ள பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
வேறொரு இடத்தில் தீக்கிரையாகும் வீடுகளில் உள்ள ப்ரொப்பேன் எரிவாயு டேங்குகள் வெடுகுண்டுகள் போல வெடித்ததாக சான் டியாகோவில் உள்ள ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்படக் கலைஞர் தெரிவித்தார்.
அப்பகுதியில் இருந்த சுமார் 450 பந்தயக் குதிரைகள் அங்கிருந்து பாதுகாப்பாக தப்பிக்க அவிழ்த்துவிடப்பட்டன என அசோசியேட் ப்ரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அனைத்து குதிரைகளும் உயிர்பிழைக்கவில்லை, அதில் எத்தனை குதிரைகள் உயிரிழந்தன என்ற தகவலும் இல்லை .
வியாழக்கிழமை மதியம் உள்ளூர் நேரப்படி, 1,89,000 குடியிருப்போர் வெளியேற்றப்பட்டுள்ளதாக கலிஃபோர்னியாவின் தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கலிஃபோர்னியா மாகாண அதிகாரிகளை தொடர்பு கொண்டதாக கூறியுள்ள வெள்ளை மாளிகை, எந்த உதவியையும் செய்யத் தயார் எனக் கூறியுள்ளது.
குறைந்த ஈரப்பதம், அதிக காற்று மற்றும் வறண்ட நிலம் போன்ற தீவிர வானிலை காரணமாக ஏற்பட்ட காட்டுத்தீயுடன் ஐந்தாவது நாளாக போராடி வருகிறது கலிஃபோர்னியா மாகாணம்.
உயர்மட்ட எச்சரிக்கையான ‘அடர் ஊதா நிற எச்சரிக்கையை’ விடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லாஸ் ஏஞ்சலீசில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வகுப்புகளை ரத்து செய்தது.
லாஸ் ஏஞ்சலீசில் உள்ள கால்வாசி பள்ளிகள் மூடப்பட்டன.
லாஸ் ஏஞ்சலீசில் உள்ள பெல் ஏர் என்ற வசதியானவர்கள் வாழும் பகுதியில் கலைப்படைப்பு ஒன்றை தீயணைப்பு வீரர்கள் அகற்றிக்கொண்டிருந்தனர்.
பிரபல பாடகி பியான்சேவின் இல்லம் முதல் தொழிலதிபர்கள் எலன் மஸ்க் இல்லம் வரை அப்பகுதியில் தான் உள்ளது.
அங்குள்ள ரூபர்ட் முட்ராக்கிற்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் திராட்சைத் தோட்டமும் சிறிதளவில் சேதமடைந்துள்ளது.
அபாய நிலையில் இருக்கும் கெட்டி அருங்காட்சியகமும் வியாழக்கிழமையன்று மூடப்பட்டது.
லாஸ் ஏஞ்சலீசின் வடக்கில் இருக்கும் மற்றொரு தீப்பிழம்பு 15,323 ஏக்கர் அளவிற்கு பரவியுள்ளது. -BBC_Tamil