கின்ஷாசா,
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். தற்போது அங்குள்ள மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், அமைதியை ஏற்படுத்தவும் ஐ.நா. அமைதிப்படை அங்கிருந்து செயல்பட்டு வருகிறது. ஆனால் அந்தப் படையினர் மீதும் அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
இந்தநிலையில், அங்குள்ள வடக்கி கிவு மாகாணத்தில் ஏ.டி.எப். என்று அழைக்கப்படுகிற கிளர்ச்சியாளர்கள் நேற்று முன்தினம் இரவு நடத்திய தாக்குதலில் ஐ.நா. அமைதிப்படையினர் 14 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், “சமீப காலத்தில் ஐ.நா. அமைதிப்படையினர் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இது. இது போர்க்குற்றம் ஆகும். இந்த தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டார்.
-dailythanthi.com