சிலாங்கூரின் விருதுகளை மகாதீரும் சித்தி ஹஸ்மாவும் திருப்பிக் கொடுத்தனர்

துன் டாக்டர் மகாதீர் முஹமட் மற்றும் அவரது மனைவி டாக்டர் சித்தி ஹஸ்மா முஹமட் அலி இருவரும், சிலாங்கூர் சுல்தானிடமிருந்து பெற்ற இரண்டு பதக்கங்களையும் திருப்பிக் கொடுத்தனர், அதில் ஒன்று அம்மாநிலத்தின் மிக உயரிய விருது ஆகும்.

இத்தகவலை, பெர்சத்து கட்சியின் தலைவர் ஒருவர் மலேசியாகினியிடம் உறுதி செய்தார்.

மேலும், மாநிலத்தின் உயரிய அவ்விருதை திரும்ப ஒப்படைக்கும் அம்முடிவை, மகாதீர் சுயமாக எடுத்தார் என்றும் அவர் தெரிவித்தார். இருப்பினும், அதற்கான காரணத்தை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

1978 மற்றும் 2003-ஆம் ஆண்டுகளில், சிலாங்கூர் சுல்தானிடமிருந்து அந்த இரண்டு பதக்கங்களையும் மகாதீர் முறையே பெற்றார்.

அப்பதக்கங்கள், கடந்த வியாழன் அன்று, புக்கிட் காயாங்கான் அரண்மனையின் மூத்த அதிகாரி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அவரைத் தொடர்ந்து, டாக்டர் சித்தி ஹஸ்மாவும், கடந்த 1983 மற்றும் 1994-  சிலாங்கூர்  சுல்தா னிடமிருந்து பெற்ற விருதுகளைத் திரும்ப ஒப்படைத்துள்ளார்.

இதுதொடர்பாக, சிலாங்கூர் சுல்தானின் தனிப்பட்ட செயலாளர் முகமட் முனிர் பானி-ஐ மலேசியாகினி தொடர்பு கொண்டது.

நவம்பர் தொடக்கத்தில், சிலாங்கூர் சுல்தான் ஷரஃபூடின் இட்ரிஸ் ஷா, அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் மூலதனமாக இனம் மற்றும் மூதாதையர்களை இழிவுபடுத்த வேண்டாம் என்று நினைவூட்டி இருந்தார்.

கடந்த அக்டோபர் 14-ல், பெட்டாலிங் ஜெயாவில் ‘சாயாங்கி மலேசியா’ ஒன்றுகூடலின் போது, மகாதீர் ஆற்றிய உரை மக்களிடையேயான நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் சீர்குலைக்கும் என்று சுல்தான் அறிவுறுத்தி இருந்தார்.

அதுமட்டுமின்றி, சுல்தான் ஷரஃபூடின், டாக்டர் மகாதீரின் உரைக்கு எதிராக தனது ஏமாற்றத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தினார், இது பூகிஸ் இனத்திற்கு எதிராக, மக்களைத் தூண்ட முயற்சிக்கும் செயல் என்றும் கூறியிருந்தார்.