நல்லாட்சி அரசின் வாக்குறுதியை நம்பமாட்டோம்! காணிகள் விடுவிக்கப்படும்வரை களமாடுவோம்!! – கேப்பாப்பிலவு மக்கள் சூளுரை (photo)
“கேப்பாப்பிலவில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் அனைத்துக் காணிகளும் இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படும்’ என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நாடாளுமன்றில் வாக்குறுதியளித்துள்ளார். நல்லாட்சி அரசின் வாக்குறுதியை நம்பி நாம் போராட்டத்தைக் கைவிடமாட்டோம். கேப்பாப்பிலவில் இராணுவத்தினர் வசமுள்ள எமது அனைத்துக் காணிகளும் விடுவிக்கப்படும்வரை அறவழிப் போராட்டம் தொடரும்.”
– இவ்வாறு கேப்பாப்பிலவு காணி விடுவிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்தனர்.
“காணி விடுவிப்பு காலதாமதமாவதால் எமது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது” என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
தமது பூர்வீகக் காணியை விடுவிக்கக் கோரி கேப்பாப்பிலவு மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டம் 284 நாட்களையும் கடந்து தொடர்கின்றது.
“இராணுவத்தின் காணிகளை நாம் கேட்கவில்லை எமது காணிகளைத்தான் கேட்கிறோம். அதனைத் தருவதற்கு இராணுவம் இவ்வளவு காலமும் ஏன் பின் நிற்கிறது என்று எமக்குத் தெரியவில்லை.
எமது கிராமத்தில் ஒருநாள் வருமானமாக 75 ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொள்வோம். இன்று அந்த வருமானம் முழுவதும் இராணுவத்தினர் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அதிக விலை கொடுத்து தேங்காயை வெளியே வேண்டுகிறோம். ஆனால், பத்து வருடங்களாக காணிகளின் வருமானங்களை இராணுவம் எடுக்கிறது. இது நியாயமானது அல்ல.
காணிகள் நாளை விடுவிக்கப்படும், மறுநாள் விடுவிக்கப்படும் என ஏமாற்று நடவடிக்கைகள்தான் தற்போது இடம்பெற்று வருகின்றது.
காணி விடுவிப்புக்காகப் பொருட்களைத் தாம் அகற்றுவதாக 6 மாத காலமாக பாசாங்கு நடவடிக்கைகளில் படையினர் ஈடுபடுகின்றார்கள்.
இராணுவம் கையகப்படுத்தியுள்ள எமது காணிகள் தொடர்பில் அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்றுதான் நாம் கூறுவோம்.
பிலக்குடியிருப்பிலிருந்து எம் பிள்ளைகள் 7 கிலோ மீற்றர் தூரம் கடந்து வற்றாப்பளைப் பகுதி பாடசாலைக்கு வருகிறார்கள். அதுவும் காட்டுவழிப் பாதையூடாக. பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு இல்லை. தினமும் பயத்துடனேயே பயணிக்கிறார்கள்.
எமது இளம் பிள்ளைகளுக்குத் தொழில் வாய்ப்புக்கள் இல்லை. எமது நிலங்களை விடுவித்தால் அவர்கள் தோட்டம், துரவு என வருமானம் தரக்கூடிய வேலைகளில் ஈடுபடுவார்கள். இவர்களின் எதிர்காலம் என்னவாகப்போகின்றது.
எப்போதுதான் எங்கள் காணிகள் விடுவிக்கப்படுமோ அன்று எமது போராட்டமும் நிறுத்தப்படும்” என்று போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் தெரிவித்தனர்.
-tamilcnn.lk