வடகொரியாவின் தலைவரான கிம் ஜாங் அன், தனது அண்டை நாடுகளான தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாடுகளை அச்சுறுத்தும் விதமாக அவ்வப்போது அணுகுண்டு, அணு ஏவுகணைகளை செலுத்தி சோதனை நடத்தி வருகிறார்.
கடந்த மாதம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஹவாசோங்-15 என்னும் ஏவுகணை சோதனையை வடகொரியா வெற்றிகரமாக நடத்தியது. இந்த ஏவுகணை அமெரிக்காவின் அனைத்து பகுதிகளையும் தாக்கும் வல்லமை கொண்டது என்பதால் உலக நாடுகள் கடும் அதிர்ச்சி அடைந்தன.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் இதனால் வெகுண்டு எழுந்தார். வடகொரியாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது.
இதைத் தொடர்ந்து தென்கொரியாவின் விமானப்படையுடன் இணைந்து கொரிய தீபகற்ப பகுதியில் அண்மையில் பிரமாண்ட போர் ஒத்திகையை நடத்தியது. இதில் அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்கள் பங்கேற்றன.
இந்த பயிற்சி முடிந்த சூட்டோடு சூடாக தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து 2 நாள் கடற்படை போர் பயிற்சியை கொரிய தீபகற்ப பகுதியில் அமெரிக்கா நேற்று தொடங்கியது. இதில், மேற்கண்ட 3 நாடுகளின் போர்க்கப்பல்களும் பங்கேற்கின்றன. அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகியவற்றின் சார்பில் 4 நாசகாரி கப்பல்கள் உள்பட ஏராளமான போர்க்கப்பல்கள் ஒத்திகையில் ஈடுபடுகின்றன.
குறிப்பாக இந்த போர் கப்பல்கள், சக்திவாய்ந்த ஏவுகணைகள் தாக்க வருவதை கண்டறிந்து அவற்றை இடை மறித்து தாக்குவதற்குரிய சோதனைகளை நடத்துவதில் ஈடுபட்டுள்ளன. வடகொரியா நடத்தும் ஏவுகணை சோதனைகள் பற்றி உடனுக்குடன் மூன்று நாடுகளும் பகிர்ந்து கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதில் கவனம் செலுத்துவதே இந்த போர் பயிற்சியின் நோக்கம் என்றும், இந்த ஒத்திகை நாளையும்(அதாவது இன்று) தொடரும் எனவும் ஜப்பான், சியோல் ராணுவ அமைச்சகங்கள் தெரிவித்தன.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு கொரிய தீபகற்ப பகுதியில் தென்கொரியா, ஜப்பான் ஆகியவற்றுடன் இணைந்து அமெரிக்கா நடத்தும் மிகப்பெரிய கடல்வழி போர் ஒத்திகை இதுவாகும்.
மூன்று நாடுகளின் கூட்டு போர் ஒத்திகை காரணமாக கொரிய தீபகற்ப பகுதியில் நேற்று முழுவதும் வெடிச் சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. இதற்கு வடகொரியாவும் பதில் நடவடிக்கையில் ஈடுபடலாம் என்பதால் கொரிய தீபகற்ப பகுதியில் போர் பதற்றம் நிலவுகிறது.