பாகிஸ்தானில் பழமைவாதிகளின் எதிர்ப்புகளைத் தாண்டி கடந்த சில ஆண்டுகளாக யோகாசனம் பிரபலமாகி வருகிறது.
பாகிஸ்தானில் அதிகாரபூர்வமாக யோகா தடை விதிதக்கப்படாத நிலையிலும் கூட பழமைவாத அமைப்புகள் யோகாசனத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இருப்பினும் பழமைவாத அமைப்புக்களின் எதிர்ப்பையும் தாண்டி அந் நாட்டில் யோகாசனத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது.
இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்ளிட்ட நகரங்களில் பொது இடங்கள் மற்றும் பூங்காக்களில் ஆண்களும், பெண்களும் பகிரங்கமாக யோகா பயிற்சியில் ஈடு பட்டு வருகின்றனர்.
லாகூரில் உள்ள ரேஸ் கோர்ஸ் பூங்காவில் நாள்தோறும் காலையில் 400க்கும் மேற்பட்டோர் யோகாசனம் செய்கின்றனர்.
தலைநகர் இஸ்லாமாபாத் உட்பட முக்கிய நகரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட யோகா பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. பெண்களுக்காக தனியாக யோகா பயிற்சி மையங்களும் உள்ளன.
பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் யோகாவை இந்து மதம் சார்ந்ததாக பார்க்கவில்லை. மிகச் சிறந்த உடற்பயிற்சியாக கருதுகின்றனர்.
பயிற்சி மையங்களைத் தாண்டி ‘யூ டியூப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் யோகா கற்பதில் பாகிஸ்தானியர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அங்குள்ள நடுத்தர குடும்பங்களில் நாள்தோறும் யோகாசனத்துக்கு தனி நேரம் ஒதுக்கப்படுகிறது.
பாகிஸ்தானின் பாபா ராம்தேவ் என்று அழைக்கப்படுகிறார் யோகி ஹைதர். இவர் லாகூரில் மிகப்பெரிய யோகா பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார்.
இவரது மையத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் யோகாசனம் கற்கின்றனர். அவர் கூறியபோது
“அதிகாலை நமாஸுக்கு பிறகு பெரும்பாலான முஸ்லிம்கள் யோகாசனம் செய்கின்றனர்.
யோகா மூலம் மனநலம் மேம்படுகிறது. உடல் வலுவாகிறது. என் மையத்தில் முஸ்லிம் மத குருக்களும் யோகாசனம் கற்கின்றனர். ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் திகதி பாகிஸ்தானின் பல நகரங்களில் யோகா தினம் கொண்டாடப்படுகிறது” என்று தெரிவித்தார்.
தலைநகர் இஸ்லாமாபாத்தில் சுமைரியா என்ற பெண் யோகா பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். அவர் கூறியபோது,
“கடந்த 20 ஆண்டுகளாக நான் யோகா ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். எனது பயிற்சி மையத்துக்கு ஆண்களைவிட பெண்கள் அதிகம் வருகின்றனர். இஸ்லாமாபாத்தில் கடந்த சில ஆண்டுகளாக யோகாசனம் மிகவும் பிரபலமாகி வருகிறது” என்று தெரிவித்தார்.
பாகிஸ்தானின் தனியார் தொலைக்காட்சிகளில் நாள்தோறும் காலை நேரங்களில் 20 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரை யோகாசன நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிகளுக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
-athirvu.com