மியான்மரில் கைது செய்யப்பட்ட 2 பத்திரிகையாளர்களை விடுவிக்க வேண்டும் – ஐ.நா. பொதுச்செயலாளர்

லண்டன்,

மியான்மரில் ராக்கின் மாகாணத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த ரோஹிங்யா முஸ்லிம் மக்களில் ஒரு பிரிவினர் (கிளர்ச்சியாளர்கள்) கடந்த ஆகஸ்டு மாதம் 25–ந் தேதி போலீஸ் படையினர் மீது தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து அங்குள்ள அந்த இனத்தவர் மீது ராணுவமும், போலீசும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டன. ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் வசித்து வந்த கிராமங்களுக்கு தீ வைக்கப்பட்டது. ஏராளமானோர் உயிரிழந்தனர். ரோஹிங்யா முஸ்லிம் பெண்கள், பாலியல் வன்முறைகளுக்கும் ஆளானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மியான்மரில் இருந்து 6 லட்சத்து 47 ஆயிரம் ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் அகதிகளாக வங்காளதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

ரோஹிங்யா முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறையில், மியான்மரின் நடைமுறைத்தலைவர் சூ கி எந்தவொரு நடவடிக்கையும் ஆக்கப்பூர்வமாக எடுக்கவில்லை என உலக அளவில் விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையே மியான்மரில் நடந்த வன்முறை வெறியாட்டத்தில் ஒரே மாதத்தில் 6,700 ரோஹிங்யா மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இது தொடர்பாக வெளியாகியுள்ள புள்ளி விவரங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்து வந்தது.

மியான்மர் அரசு வெறும் 400 பேர் மட்டுமே கொல்லப்பட்டதாக கூறியது. இந்த நிலையில், எம்.எஸ்.எப். என்னும் எல்லையற்ற டாக்டர்கள் அமைப்பு, ராக்கின் மாகாணத்தில் நடந்த கலவரத்தில் ஒரு மாதத்தில் மட்டுமே 6 ஆயிரத்து 700 ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் கொன்று குவிக்கப்பட்டதாக கூறி உள்ளது.

குழந்தைகள் கொல்லப்பட்ட கொடுமை

இவர்களில் 730 பேர் குழந்தைகள் அதுவும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் வாழ்ந்து வந்த ரோஹிங்யா மக்களிடம் நடத்திய சர்வேயின் அடிப்படையில் இந்த புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மிகவும் பழமையான மதிப்பீடுகளின் அடிப்படையிலானது, வன்முறையில் 6 ஆயிரத்து 700 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று எம்.எஸ்.எப். சொல்கிறது. இதுபற்றி அந்த அமைப்பின் மருத்துவ இயக்குனர் சிட்னி வோங் கூறுகையில்,

‘‘மியான்மர் வன்முறையில் உயிர் தப்பி, இப்போது வங்காளதேசத்தில் முகாம்களில் வைக்கப்பட்டுள்ள ரோஹிங்யா முஸ்லிம்களை கண்டு பேசினோம். அவர்களிடம் இருந்து கிடைத்த தகவல்கள் நடுங்க வைப்பதாக அமைந்துள்ளன. அந்த இன மக்கள் மிகப் பயங்கரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். காயப்படுத்தப்பட்டுள்ளனர்’’ என குறிப்பிட்டார். கொல்லப்பட்டவர்களில் 69 சதவீதத்தினர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக சர்வேயில் தெரியவந்துள்ளது. 9 சதவீதத்தினர் ஈவிரக்கமின்றி வீடுகளுக்குள் வைத்து உயிரோடு எரிக்கப்பட்டுள்ளனர். 5 சதவீதத்தினர் அடித்துக்கொல்லப்பட்டுள்ளனர். குழந்தைகளைப் பொறுத்தமட்டில், 60 சதவீதம் பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த தகவல்கள் உலக நாடுகளை அதிர வைத்துள்ளன.

செய்தியாளர்கள் கைது 

ரோஹிங்கியா முஸ்லிம்கள் ராணுவத்தின் அடக்குமுறைக்கு உள்ளாகி உள்ளநிலையில் சர்வதேச ஊடகங்கள் மியான்மரில் இருந்து தொடர்ந்து செய்தி சேகரித்து வருகின்றன. இந்நிலையில், ராய்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் இரு பத்திரிக்கையாளர்கள் இருவர் யாங்கூனில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். யாங்கூனில் இருந்து செய்தி சேகரித்த வா லோன் மற்றும் யாவ் சோய் ஊ என்ற இரு பத்திரிக்கையாளர்களும் மாயமாகினர். அவர்களை தொடர்பு கொள்ள முடியாததால் அங்குள்ள காவல் நிலையத்தில் அந்நிறுவனம் புகாரளித்தது. இதனையடுத்து சட்ட விதிமுறைகளை மீறி செய்தி சேகரித்து அதை வெளிநாட்டுக்கு அனுப்பியதாக வா லோன் மற்றும் யாவ் சோய் ஊ ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,

இவர்களுக்கு உதவியாக இருந்த ஒரு காவலரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்தது. பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டுக்கான அமெரிக்க தூதர், சர்வதேச சட்ட திட்டங்கள் படி பத்திரிக்கையாளர்களை நடத்த வேண்டும் என கூறி உள்ளார். பத்திரிகையாளர்கள் கைதுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள பிரிவுக்கு 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சர்வதேச அளவில் மியான்மர் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

இந்நிலையில் மியான்மரில் கைது செய்யப்பட்ட 2 பத்திரிகையாளர்களை விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வலியுறுத்தி உள்ளார். செய்தியாளர்கள் கைது என்பது மியான்மரில் பத்திரிக்கை சுதந்திரம் என்பது மூழ்கிக்கொண்டு இருக்கிறது என்பதற்கான எச்சரிக்கையாகும், செய்தியாளர்களை விடுதலை செய்ய சர்வதேச நாடுகள் தங்களால் முடிந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கூறிஉள்ளார்.

-dailythanthi.com