பேச்சுவார்த்தைக்கான உரிமையை வடகொரியா ஈட்டவேண்டும்: டில்லர்சன்

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளரான ரெக்ஸ் டில்லர்சன், “பேச்சுவார்த்தைக்கான இடத்தை மீண்டும் அடைய, வடகொரியா அதற்கான உரிமையை ஈட்டவேண்டும்” என கூறியுள்ளார்.

இருநாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பு, வடகொரியா தனது ஆயுத சோதனைகளை நிறுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

கடந்த வாரம், அவர் தெரிவித்திருந்த கருத்திற்கு, மாற்றாக இந்த கருத்துள்ளது. கடந்தவாரம், அமெரிக்காவில் பேசிய டில்லர்சன், “வடகொரியா எப்போது பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும் பேசத் தயார்” என்று கூறியிருந்தார்.

அந்த கருத்திற்கு எதிர்மறையான கருத்தை வெள்ளை மாளிகை அளித்திருந்தது.

உலகளவிலான கண்டனம் மற்றும் சர்வதேச அளவில் வலுத்துவரும் தடைகளையும் மீறி, இந்த ஆண்டு, பல ஆயுத சோதனைகளை வடகொரியா நிகழ்த்தியது.

இந்த வாரத்தொடக்கத்தில் பேசியிருந்த டில்லர்சன், “ஒன்றாக அமர்ந்து பேசலாம், நம் இருநாடுகளும் இணைந்து எந்தெந்த விஷயங்களில் பணியாற்ற முடியும் என பேசலாம்” என்று அழைத்திருந்தார்.

அவரின் கருத்தை, சீனா மற்றும் ரஷ்யா வரவேற்றிருந்தன. ஆனால், அந்த கருத்திற்கு எதிர்மறையாக வெள்ளை மாளிகை கருத்து அமைந்திருந்தது.

பேச்சுவார்த்தைக்கு திரும்புவதற்கு முன்பாக, வடகொரியா எல்லா அணுஆயுதங்களையும் அழிப்போம் என்று ஒப்புக்கொள்ள வேண்டும் என தெரிவித்தது.

அடுத்த சில மணிநேரங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஊடக செயலாளர் சாரா சாண்டர்ஸ், அதிபரின் பார்வையில் மாற்றமில்லை என்று கூறியிருந்தார்.

“வடகொரியா, ஜப்பான், சீனா மற்றும் தென்கொரியாவிற்கு மற்றும் பாதுக்காப்பாற்ற முறையில் செயல்படவில்லை. முழு உலகிற்குமே செயல்படுகிறது” என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

வெள்ளிக்கிழமை பேசிய டில்லர்சன், இதுகுறித்து, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இருநாடுகளுமே, வடகொரியாவை வலியுறுத்த வேண்டும் என கூறினார். இருநாடுகளும் அதை மறுத்துவிட்டன.

ஐ.நாவின் பாதுகாப்புக் குழு கூட்டத்தில் பேசிய டில்லர்சன், “ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் நடப்பதற்கான வாய்ப்புகள் இன்னும் உள்ளன. ஆனால், பேச்சுவார்த்தைக்காக வடகொரியா வைக்கும் கட்டுப்பாடுகளுக்கு அமெரிக்கா பணியாது” என்று கூறினார்.

“பேச்சுவார்த்தை முன்பு நடக்கும் கட்டுப்பாடுகளாக, எந்த தடையையும் தளர்த்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று அவர் கூறினார். -BBC_Tamil

அமெரிக்காவின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை, புறக்கணித்தது வடகொரியா..

வடகொரியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர், வடகொரியா அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார்.

எனினும் வடகொரியாவிற்கு ரரெக்ஸ் டில்லர்சனால் விடுக்கப்பட்ட அழைப்பை வடகொரியா புறக்கணித்துள்ளது.

அமெரிக்காவின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை புறக்கணித்தது வடகொரியா

ஐக்கிய நாடுகள் சபையில் நேற்றைய தினம் இடம்பெற்ற கூட்டமொன்றில கலந்து கொண்டு உரையாற்றிய ரெக்ஸ் டில்லர்சன், வடகொரியா அமெரிக்காவுடன் பேசுவதற்கு விரும்பினால் அமெர்க்கா தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

அத்துடன், பேச்சுவார்த்தைக்கு முன்னர் எந்தவிதத் தடையையும் தளர்த்துவதை நாம் அனுமதிக்கமாட்டோம் எனத் தெரிவித்த அவர், இரு நாடுகளுக்குமிடையில் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட முன்னர், வடகொரியா தனது ஆயுதச் சோதனைகளை நிறுத்த வேண்டும்’ எனவும் தெரிவித்தார்.

எனினும், பேச்சுவார்த்தைகளுக்காக வடகொரியா விதிக்கும் நிபந்தனைகளுக்கு ஒருபோதும் அமெரிக்கா அடி பணியாது எனவும் அவர் கூறினார்.

இதற்கு கருத்து தெரிவித்த ஐ.நாவிற்கான வடகொரிய தூதுவர் ஜா சாங் நம், வடகொரியாவின் நலன்களை மீறாத நிலையில், எந்தவொரு நாட்டுக்கும் வடகொரியா ஆபத்தாக இருக்கமாட்டாதெனவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘எமது நாட்டைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்பதை நாம் தெளிவாகக் கூறிக்கொள்வதாகவும், எனினும், அமெரிக்காவுடன் போரை முன்னெடுப்பதற்கு நாம் விரும்பவில்லை எனவும் கூறியுள்ளர்.

ஜா சாங் நம்மின் இந்த கருத்து வடகொரியா அமெர்க்காவின் சமாதான பேச்சுவார்த்தைக்கான அழைப்பை புறக்கணித்துள்ளமையை காட்டுவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.