காசாவின் எல்லைப் பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகளுடன் நடைபெற்ற மோதலில், மூன்று பாலத்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெருசலேத்தை இஸ்ரேல் தலைநகரமாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவை எதிர்த்து நடைபெற்று வரும் புதிய போராட்டங்களில் காசா மற்றும் மேற்கு கரையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மேற்கு கரையில் பாலத்தீனர் ஒருவர் கத்தியால் குத்தியதில், இஸ்ரேலிய காவல்துறை அதிகாரி படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு தாக்கிய நபர் சுட்டுக் கொள்ளப்பட்டார்.
ஜெருசலேம் குறித்த டிரம்பின் முடிவையடுத்து வன்முறை போராட்டங்கள் அதிகரித்துள்ளன.
முழு ஜெருசலேத்தையும் தங்கள் தலைநகராக இஸ்ரேல் கருதுகிறது. ஆனால், 1967 ஆம் அண்டில் இருந்து இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கிழக்கு பகுதியை தங்கள் எதிர்கால அரசின் தலைநகராக பாலத்தீனியர்கள் உரிமைக் கோருகின்றனர்.
ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்த டிரம்பின் முடிவிற்கு அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்திருக்க, இஸ்ரேல் அமெரிக்காவை பாராட்டியது.
டிரம்பின் இந்த அறிவிப்பு, ஜெருசலேம் விவகாரத்தில் பல தசாப்தங்களாக அமெரிக்கா கொண்டிருந்த நடுநிலையை முடிவுக்கு கொண்டு வந்தது.
கல்வீச்சு மற்றும் துப்பாக்கிச்சூடு
காசாவின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லைப் பகுதிகளில் சிலர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பாலத்தீனிய மருத்துவத்துறை கூறுகின்றன.
இது தொடர்பான செய்திகளை விசாரித்து வருவதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் தெரிவித்தது.
வெள்ளிக்கிழமை தொழுகையை அடுத்து வெடித்த மோதலில், கண்ணீர்புகை குண்டுகள் வீசிய இஸ்ரேலிய துருப்புகள் மீது பாலத்தீனியர்கள் கற்களை வீசியும், டயர்களை எரித்தும் போராடியதாக செய்திகள் கூறுகின்றன.
ரமல்லாவில் மேற்கு கரையின் புறநகர் பகுதிகளில், எல்லை காவல்துறை அதிகாரியை பாலத்தீனியர் ஒருவர் கத்தியால் குத்தியதை அடுத்து அவர் சுடப்பட்டதாக போலீஸ் தெரிவித்தது.
தாக்கிய நபர் வெடி பொருட்களை உடலில் பொருத்தியிருந்தாரா என்பது பற்றி போலீஸ் விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் மிக்கி ரொசன்ஃபெல்ட் கூறினார்.
டிசம்பர் 6 ஆம் தேதி டிரம்ப் அறிவித்த முடிவையடுத்து, இஸ்ரேலுடன் நடைபெற்ற வன்முறை போராட்டங்களில் இதுவரை எட்டு பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். -BBC_Tamil