தமிழரசுக் கட்சிக்கு வேகத்தடை போட்டது யார்? கூட்டமைப்பின் அடுத்த தலைவர் இவரா..?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எழுந்த ஆசனப்பங்கீட்டுப் பிரச்சினைகளை அடுத்து, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு, தமிழரசுக் கட்சியின் ‘வீட்டுச்’ சின்னத்தில் போட்டியிடுவதில்லை என்று அறிவித்தது.

ஏற்கனவே, சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்.) கூட்டமைப்பிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், ரெலோவும் வெளியேறினால், அது ‘கூட்டமைப்பு’ என்கிற அடையாளத்தின் மீதான பெரும் அடியாக அமைந்திருக்கும்.

ஆனாலும், இரா.சம்பந்தனின் தலையீடுகளை அடுத்து கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இடையே முன்னெடுக்கப்பட்ட தொடர் பேச்சுவார்த்தைகள் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வந்திருக்கின்றன. இதன்மூலம், ரெலோவின் வெளியேற்றமும் தடுக்கப்பட்டிருக்கின்றது.

ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மீது, அந்த இயக்கத்தின் மத்திய குழுவுக்கு கடந்த சில வருடங்களாக அதிருப்தி நிலவி வருகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிற அடையாளத்துக்குள் இருந்தாலும், தமிழரசுக் கட்சி தன்னை தனியொரு கட்சியாக வளர்ப்பதில் கடந்த சில வருடங்களாக கவனமாக இருந்து வருகின்றது. அப்படியான நிலையில், ரெலோ இயக்கத்தினை பலப்படுத்துவது மற்றும் அதன் தனித்துவத்தைப் பேணுவது தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் எந்தவித ஈடுபாட்டையும் காட்டாது, தமிழரசுக் கட்சியின் ஒட்டுமொத்தமான இழுப்புக்கும் அசைந்து கொடுத்து, ரெலோவின் இருப்பை கேள்விக்குள்ளாகுகிறார் என்பதே மத்திய குழுவின் குற்றச்சாட்டு.

தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதில்லை என்று ரெலோ மத்திய குழு அறிவித்த நிலையில், அதன் தலைவர் என்கிற நிலையில் செல்வம் அடைக்கலநாதனிடம் கருத்துக்களைப் பெற ஊடகங்கள் முனைந்தன. ஆனால், அவர் அமைதியாக இருந்துவிட்டார்.

இந்த விடயம் தொடர்பில், ரெலோ மத்திய குழு உறுப்பினர் ஒருவர் இந்தப் பத்தியாளரிடம் கீழ்க்கண்டவாறு கூறினார்.

“….நாங்கள் தமிழரசுக் கட்சியின் அடிமைகள் அல்ல. கூட்டமைப்பில் நாங்களும் ஒரு பங்காளிக் கட்சி. எங்களுக்கும் உரிமை இருக்கின்றது. சம்பந்தனும், சுமந்திரனும் சொல்வதை மாத்திரம் வேதவாக்காக எடுத்துக் கொண்டிருக்க முடியாது. அதனை, செல்வம் (அடைக்கலநாதன்) உணர்ந்து கொள்ள வேண்டும். அவர் கருத்துச் சொல்லவில்லை என்றால், நாங்கள் எதுவும் செய்ய முடியாது. கட்சி என்கிற ரீதியில் மத்திய குழுவின் முடிவே இறுதியானது. ஆசனப்பங்கீட்டில் தமிழரசுக் கட்சி சர்வாதிகாரப் போக்கில் செயற்படுகின்றது. அதனை அவர்கள் கைவிடும் வரையில் வெளியேற்றம் என்கிற எமது முடிவில் மாற்றம் இருக்காது…”

ஆனால், இந்தப் பிரச்சினைக்கு இன்னொரு பக்கமும் இருக்கவே செய்கிறது.

தமிழர் விடுதலைக் கூட்டணியோடு, ஈ.பி.ஆர்.எல்.எப்., மற்றும் ஜனநாயகக் போராளிகள் கட்சியின் ஒரு பிரிவு இணைந்து ‘தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு’ என்கிற தேர்தல் கூட்டணியை அமைத்து ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிடுவதற்கு கடந்த வாரம் தீர்மானித்தது.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, கூட்டமைப்புக்குள் ஏக நிலையில் ஆளுமை செலுத்த நினைக்கும் தமிழரசுக் கட்சிக்கு அழுத்தங்களை வழங்கலாம் என்பதே அது. அதன்போக்கில், ஆசனப்பங்கீட்டில் எழுந்த பிரச்சினைகளை முன்னிறுத்தி, ‘வெளியேற்றம்’ என்கிற ஆட்டத்தை ரெலோ அரங்கேற்றியருக்கலாம்.

தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரை, சுரேஷ் பிரேமச்சந்திரனை அல்லது அவரின் செயற்பாடுகளை ஒத்தவர்களை தமது கட்சியின் வளர்ச்சிக்கும், கூட்டமைப்புக்குள் தாம் செலுத்த நினைக்கும் ஏக நிலைக்கும் இடையூறாக பார்த்து வந்திருக்கின்றது.

அதன்போக்கிலேயே, அவரை கூட்டமைப்புக்குள் இருந்து வெளியேற்றவும் தீர்மானித்து இயங்கியது. எனினும், ‘கூட்டமைப்பு’ என்கிற அடையாளத்தை இன்னும் சிறிது காலத்துக்கு பேணுவதற்கும், பலமான எதிர்த்தரப்பொன்று உருவாவதைத் தடுப்பதற்கும் செல்வம் அடைக்கலநாதன் போன்றதொரு நெகிழ்வான பங்காளிக் கட்சித் தலைவரைத் தக்க வைக்க வேண்டிய அவசியம் உண்டு.

அதன்போக்கில், தமிழரசுக் கட்சியின் மாவட்ட மட்டத் தலைவர்கள் மற்றும் இரண்டாம் மட்டத் தலைவர்களின் விருப்பத்துக்கு அப்பால் சென்று, ஆசனப்பங்கீட்டில் தமிழரசுக் கட்சி விட்டுக்கொடுப்புக்களைச் செய்து, ரெலோவின் வெளியேற்றம் குறித்த ஆட்டத்தினை தற்போதைக்கு முடித்து வைத்திருக்கின்றது.

அந்த அரங்கு மீண்டும் மாகாண சபைத் தேர்தல்களிலோ, பொதுத் தேர்தலிலோ திறக்காது என்று அர்த்தமில்லை. அதற்கான வலுவான காரணங்கள் அப்படியே இருக்கின்றன. இதுவொரு தற்காலிக முடிவு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்று அழைக்கப்பட்டாலும், தன்னுடைய உத்தியோகபூர்வ அறிக்கைகளில் ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர்’ என்றே இரா.சம்பந்தன், தன்னை 2015ஆம் ஆண்டு வரையில் அடையாளப்படுத்தி வந்தார்.

தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியை மாவை சேனாதிராஜாவிடம் கையளித்ததும், ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்’ என்கிற அடையாளத்தை அவர், உத்தியோகபூர்வ அறிக்கைகளிலும் பிரதிபலிக்க ஆரம்பித்தார்.

இன்றைக்கு அவர், தன்னை கூட்டமைப்பின் தலைவராகவே கட்டமைத்து முன்னிறுத்தியிருக்கின்றார். அப்படியான நிலையில், கூட்டமைப்பு என்கிற அடையாளத்தின் சிதைவுக்கான கட்டங்களை அவர் இலகுவாக விட்டுக்கொடுக்க விரும்பவில்லை.

அதாவது, தமிழரசுக் கட்சியை ஏக நிலையில் வளர்த்து ஆளுகை செலுத்த வேண்டும் என்பது சம்பந்தனின் விருப்பமாக இருந்தாலும், கூட்டமைப்பு என்கிற அடையாளத்தினை தக்க வைப்பதற்காக ‘ரெலோ’வை தக்க வைத்துக் கொண்டிருக்க வேண்டிய கடப்பாடும் அவருக்கு உண்டு.

ஏனெனில், கூட்டமைப்பின் ஸ்தாபக பங்காளிகளில் ‘ரெலோ’ மாத்திரமே இன்னமும் கூட்டமைப்புக்குள் இருக்கின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸூம், ஈ.பி.ஆர்.எல்.எப்.வும் இப்போது கூட்டமைப்புக்குள் இல்லை.

அத்தோடு, வடக்கு- கிழக்கு தமிழ் மக்களின் ‘ஏக தலைமை’ என்கிற அடையாளத்தையும், பாராளுமன்றத்துக்குள் மூன்றாவது பெரிய கட்சி என்கிற நிலையையும் விட்டுக்கொடுப்பதற்கு சம்பந்தன் விரும்பவில்லை.

ஏற்கனவே, சிவசக்தி ஆனந்தன் கூட்டமைப்புக்குள் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 16இலிருந்து 15ஆக குறைந்துவிட்டது.

ரெலோ இயக்கமும் வெளியேறினால், அது, 13ஆக சுருங்கிவிடும். இது, ஒரு வகையில், பெரும் வீழ்ச்சியாகவே இருக்கும்.

மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் ஆயுட்காலம் ஊசலாடிக் கொண்டிருக்கின்ற நிலையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் கூட்டமைப்பு பலமாக இருப்பதே வாய்ப்பானது.

அதுதான், பல வழிகளிலும் மைத்திரி- மஹிந்த இணைவைத் தடுக்கும். ஏனெனில், மைத்திரி அரசாங்கத்திலிருந்து வெளியேறினாலும், ரணிலினால் கூட்டமைப்பின் ஆதரவை பெற்றுக்கொண்டு ஆட்சியமைக்க முடியும் என்கிற நிலையில், மஹிந்தவுடனான மைத்திரியின் இணைவை அது தடுக்கும்.

கூட்டமைப்பும், மைத்திரி- ரணில் அரசாங்கத்தை அல்லது ரணில் அரசாங்கத்தையே விரும்புகின்றது. மாறாக, மஹிந்த பங்கெடுக்கும் எந்தவொரு அரசாங்கத்தையும் விரும்பவில்லை.

அவ்வாறான நிலையில், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை சிதறாமல் பேணுவதும் சம்பந்தனின் தலையாய கடமையாகும்.

தமிழரசுக் கட்சியை தனிப்பெரும் கட்சியாக வளர்த்து அதன் தலைமைப் பதவியை அடைய வேண்டும் என்பது எம்.ஏ.சுமந்திரனின் விருப்பம்.

அதனை அவர் இப்போது மறுத்தாலும், அவரின் பயணம் அதனை நோக்கியதாகவே இருந்து வந்திருக்கின்றது.

ஆனால், அந்தப் பயணத்தின் ஓட்டத்தை தற்போதைக்கு சடுதியாக தாமதப்படுத்தியது, சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்ட பெரும் பிளவு. ஏனெனில், அந்தப் பிளவினை மைத்திரியினால் சரிசெய்ய முடியாது போயுள்ள நிலையிலேயே, அவர் மஹிந்தவோடு பேச்சுவார்த்தைகளுக்கு செல்ல வேண்டி ஏற்பட்டிருக்கின்றது.

அதனாலேயே, மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் ஆயுளும் நெருக்கடியைச் சந்திக்க வேண்டிய வந்திருக்கின்றது. அந்தக் காரணமே, சுமந்திரனின் ஓட்ட வேகத்தை தற்காலிகமாக குறைந்து விட்டிருக்கின்றது.

கூட்டமைப்புக்குள் ஆசனப்பங்கீட்டுப் பிரச்சினை கடந்த வாரம் நீடித்து வந்த நிலையில், மற்றொரு பக்கமாக கூட்டமைப்புக்கு எதிரான (குறிப்பாக, தமிழரசுக் கட்சிக்கு) தரப்புக்கள் பல்வேறு கூறுகளாக பிளவடைந்து தமக்குள் பகை வளர்ப்புப் பயணத்தை ஆரம்பித்திருக்கின்றன.

கூட்டமைப்புக்கு எதிரான மாற்றுத்தலைமைக் கோசத்தோடு வலம் வந்த தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்களையும், சிவில் சமூக அமைப்புக்களின் தலைவர்களையும் கடந்த சில வாரங்களாக அரங்கிலேயே காண முடியவில்லை.

பேரவையில் அங்கம் வகித்த (வகிக்கும்?) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் ஆகிய மூன்று கட்சிகளும் இப்போது, மூன்று தேர்தல் கூட்டணிகளில் அங்கம் வகிக்கின்றன. ‘எழுக தமிழ்’ பேரணிக்காக இணைந்து வேலை செய்த இந்த மூன்று கட்சிகளின் ஆதரவாளர்களும், உள்ளூராட்சித் மன்றத் தேர்தல்களில் எதிர் எதிரணியில் வேலை செய்ய வேண்டிய ஏற்பட்டிருக்கின்றது.

பேரவையின் இணைத் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனோ, தற்போதைய அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் கருத்துச் சொல்வதிலிருந்து விலகியோட நினைக்கின்றார். ஊடகவியலாளர்கள் அவரை இழுத்துப் பிடித்து கேள்விகளைத் தொடுத்தாலும், பட்டும்படாமலும், சம்பந்தனை நோகடிக்காமலும் பதில் சொல்வதில் கவனமாக இருக்கின்றார்.

இவ்வாறான நிலைகள் உணர்த்துவது என்னவோ, தமிழரசுக் கட்சிக்கு தற்போது வேகத்தடையாக மாறியிருப்பது சுதந்திரக் கட்சிக்குள் இருக்கும் மைத்திரி- மஹிந்த பிளவு மாத்திரமே என்பது.

இது, உண்மையிலேயே, தமிழ்த் தேசியப் பரப்புக்குள் மாற்றுத் தலைமைகளாகவோ, புதிய தலைமைகளாகவே வர நினைக்கும் தரப்புக்களின் தோல்வி.

ஏனெனில், தமிழரசுக் கட்சியின் ஏக பயணத்துக்கான அந்த வெளி அப்படியே இருக்கின்றது எந்தவித அக நெருக்கடிகளுமின்றி!

-புருஜோத்தமன் தங்கமயில்

-puthinamnews.com

TAGS: