ஜெருசலேம் விவகாரம்: ஐ.நாவின் வரைவுத் தீர்மானத்தை நிராகரித்தது அமெரிக்கா

ஜெருசலேத்தை, இஸ்ரேலின் தலைநகராக, டிரம்ப் அங்கீகரித்ததை நிராகரித்து, ஐ.நாவின் பாதுகாப்புக்குழு கொண்டுவந்த வரைவு தீர்மானத்தை அமெரிக்கா நிராகரித்துள்ளது

எகிப்து முன்வைத்த அறிக்கையில், ஜெருசலேம் குறித்து எடுக்கப்பட்ட எந்த முடிவாக இருந்தாலும், அது, “சட்டரீதியாக செல்லாது, அவை வெற்று முடிவுகளே, அவை ரத்துசெய்யப்பட்டவை” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த தீர்மானத்திற்கு 14 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதியான, நிக்கி ஹாலே, இதை ஒரு அவசானம் என்று விவரித்ததோடு, இந்த செயல் மறக்கப்படாது என்று எச்சரிக்கையும் விடுத்தார்.

“ஜெருசலேம் விவகாரத்தில், நன்மைக்கு பதிலாக ஐ.நா அதிக தீங்கு செய்கிறது என்பதற்கு, இது மேலும் ஒரு உதாரணம்” என்று அவர் கூறினார்.

“இன்று, தூதரகத்தை எங்கு அமைப்பது என்ற மிகவும் எளிய செயலுக்காக, அமெரிக்கா தனது இறையாண்மையை காக்க வேண்டியுள்ளது. நாங்கள் மிகவும் பெருமையோடு, அவ்வாறு செயல்பட்டோம் என்பதை வரலாறுகள் கூறும்” என்றார்.

இதைத்தவிர, வரும் செவ்வாய்கிழமை தொடங்குவதாக இருந்த, அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸின் மத்திய கிழக்கு நாடுகள் பயணம், ஜனவரியின் இரண்டாம் வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜெருசலேம் விவகாரத்தில், அமெரிக்காவின் முடிவைத் தொடர்ந்து, அந்நாட்டிற்கு வருவதாக இருந்த அமெரிக்க துணை அதிபரை சந்திக்க, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் மறுத்துவிட்டார்.

ஜெருசலேம் குறித்த எந்த முடிவும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையிலான பிரச்சனையில் முக்கிய முடிவாக அமையும்.

1967ஆம் ஆண்டு நடந்த மத்திய கிழக்கு போரின்போது, ஜோர்டானால் கைபற்றப்பட்ட ஜெருசலேத்தின் கிழக்கு பகுதியை, இஸ்ரேல் கைபற்றியது. அதுமுதல், அந்த முழு நகரையும் தங்களின் தலைநகர் என்று இஸ்ரேல் குறிப்பிடுகிறது.

பாலத்தீனம், கிழக்கு ஜெருசலேத்தை, வருங்கால நாட்டின் தலைமையகமாக குறிப்பிடுவதோடு, இதுகுறித்த எந்த இறுதி முடிவாக இருந்தாலும், அமைதிப் பேச்சுவார்த்தையின்போது நடைபெறும் என்று குறிப்பிடுகிறது.

ஜெருசலேம் மீது, இஸ்ரேல் செலுத்தும் அதிகாரம், இதுவரை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டதில்லை. எல்லா நாடுகளுமே, தங்களின் தூதரகத்தை டெல் அவிவ் பகுதியிலேயே வைத்துள்ளன.

இருந்தபோதும், அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்காவின் தூதரகத்தை மாற்றும் பணிகளை தொடங்குமாறு தெரிவித்துள்ளார்.

அதிக ஆதரவை பெறுவதற்காக, வரைவுத் தீர்மானத்தில், டிரம்ப் அல்லது அமெரிக்காவை குறித்த எந்த கருத்துகளையும் இடம்பெறுவது தவிர்க்கப்பட்டது என்று குறிப்பிடுகிறார் பிபிசி செய்தியாளர் நாடா டஃபிக்.

மேலும், ஜெருசலம் விவகாரத்தில் பாதுகாப்புக்குழுவின் தீர்மானத்தை ஏற்கும் அனைத்து நாடுகளும், அதற்கு எதிராக எந்த செயல்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்கா தரப்பிலிருந்து வந்துள்ள தடை என்பது நிச்சயம் வரக்கூடிய ஒன்றே என்கிறார் நமது செய்தியாளர்.

ஆனால், சீனா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நிரந்தர பிரதிநிதிகள் கொண்ட நாடுகளும், 10 நிரந்தரமற்ற பிரதிநிதிகள் கொண்ட நாடுகளும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

பாதுகாப்புக்குழுவின் வரைவுத் தீர்மானத்திற்கு அமெரிக்கா தடைவிதித்து அளித்த கருத்திற்காக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிக்கி ஹாலேக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஆனால், பாலத்தீன அதிபரின் செய்திதொடர்பாளர், “அமெரிக்காவின் இந்த செயல் என்பது ஏற்புடையதல்ல, சர்வதேச சமூகத்தின் திடத்தன்மையை அச்சுறுத்தும் வகையில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

“சர்வதேச சமூகம், பாலத்தீன மக்களை பாதுகாக்க பணியாற்ற வேண்டும்” என்று நபில் அபு ருடீனா ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

ஐ.நா பொதுக்குழுவின் அவசரகால கூட்டத்தை கூட்டுவேன் என்று, பாலத்தீன வெளியுறவுத்துறை அமைச்சர் ரியாத் அல்-மலிக்கி தெரிவித்துள்ளார்.

ஜெருசலேம் குறித்த டிரம்பின் முடிவில் மூலம், பாதுகாப்பு சூழல் என்பது மிகவும் மோசமானது என்று மத்திய கிழக்கு நாடுகளின் அமைதிப்பணிகளுக்கான ஐ.நாவின் ஒருங்கிணைப்பாளரான நிக்கலோய் மிலாடெனாஃப் கூறியுள்ளார். -BBC_Tamil