ஏமனிலிருந்து ரியாத்தை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையில் இரான் சின்னம்

ரியாத்தை தாக்குவதற்காக ஏமனிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணையில் இரான் சின்னம் இருந்ததாக ஐ.நா-வுக்கான அமெரிக்க தூதர் கூறியுள்ளார்.

இந்த ஏவுகணை தாக்குதல் முயற்சி செவ்வாய்க்கிழமை நிகழ்ந்தது. ஆனால், இந்த ஏவுகணையை செளதி அரேபியா இடைமறித்து அழித்தது.

மன்னரின் தலைமையகம் மற்றும் அரசவை அமைந்துள்ள அல்-யாமாமா அரண்மனையை குறிவைத்து புர்கான் ஹெச்-2 பேலிஸ்டிக் ஏவுகணையைக் கொண்டு இத்தாக்குதல் நடந்தப்பட்டதாக அல் – மாசிரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதலால் எந்த சேதமும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரான் ஆயுதம்:

நியூயார்க்கில் உள்ள ஐ.நா பாதுகாப்பு சபையில் பேசிய ஐ.நா-வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே, முன்பு இரான் கொடுத்த ஆயுதங்களைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் என்ன சின்னம் இருந்ததோ, அதே சின்னம் இந்த ஏவுகணையிலும் இருந்தது என்றார்.

“இரான் அரசு செய்யும் குற்றங்களை அம்பலப்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், ஒரு மோசமான பிராந்திய மோதலுக்கு இரான் வித்திட்டுவிடும்.” என்று பேசியுள்ளார்.

மேலும் அவர், “பாதுகாப்பு மன்றம் இரான் மீது பல நடவடிக்கைகளை எடுக்க முடியும். ஆனால், இரானுக்கு நெருக்கமாக இருக்கும் ரஷ்யா, அந்த நடவடிக்கைகளை ஆதரிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளது.”

அமெரிக்கா மற்றும் செளதி கூட்டணிப்படை ஏமன் மக்களுக்கு எதிராக செய்யும் கொடிய குற்றங்களுக்கு எதிரான தாக்குதல் இது என்று அல் – மாசிரா செய்தி வெளியிட்டுள்ளது.

நவம்பர் மாதம் 4-ம் தேதி ரியாத்தில் உள்ள அரசர் காலித் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த தாக்குதலுக்கும் இதே புர்கான் ஏவுகணைதான் பயன்படுத்தப்பட்டு இருந்தது.

மறுக்கும் இரான்:

ஏமன் அரசு மற்றும் செளதி தலைமையிலான கூட்டுப்படைக்கு எதிராக ஏமனில் சண்டையிட்டுவரும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு தாங்கள் எந்த உதவியும் செய்யவில்லை என்று இரான் கூறியுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதல், செளதி தலைமையிலான கூட்டணிப்படையின் ஆக்கிரமிப்புக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் சுயமான நடவடிக்கையாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளது. -BBC_Tamil