“உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது ஜெனீவாவில் நீதி கோருவது சம்பந்தமானதோ, காணாமற்போனோர் சம்பந்தமானதோ,
அரசியல் கைதிகள் சம்பந்தமனதோ அல்லது அரசியல் தீர்வு சம்பந்தமானதோ அல்ல” என்று முன்னாள் வடக்கு- கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவருமான அ.வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பாலமீன்மடுவில் உள்ள அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறி்ப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “உள்ளூராட்சி மன்றம் என்பது நுளம்புகளை ஒழிப்பதற்கான சபையாகும். நல்ல தண்ணீர், நல்ல வீதிகள் கொடுப்பதற்கான சபையாகும். எங்களுடைய நகரங்களையும் பிரதேசங்களையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பதே உள்ளூராட்சி மன்றங்களின் கடமையாகும்.
வெறுமனே வீர வசனங்கள் பேசுவதும் தேர்தலில் வெல்வதும், பின்னர் தங்களுடைய சுகபோகங்களை பார்க்கின்ற அரசியல் தான் தமிழ் மக்கள் மத்தியில் இன்று வளர்ந்திருக்கின்றது. அந்த நிலையை மாற்றியமைப்பதற்கு உண்மையாக மக்களுக்கு சேவை செய்பவர்கள், உண்மையாக கடந்த காலங்களில் தங்களை அர்ப்பணித்து மக்களுக்காக சேவையாற்றியவர்கள், தங்களுடைய கல்வியை இழந்து மக்களுக்காக போராடியவர்களை மக்கள் தெரிவு செய்யும் போதுதான் உண்மையான மக்கள் சேவகர்களை மக்கள் பெற முடியும்.
இந்த விடயங்களை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக இளைஞர் சமூகம் மிகத் தெளிவான சிந்தனையோடு செயற்பட வேண்டும். ஏனெனில் இனிவரும் காலம் அவர்களுக்குரியது. எங்களுடைய பிரதேசங்களின் வளர்ச்சியும் முன்னேற்றமும் அடைவதற்கு தேவையான வேலைகளை செய்கின்ற கடமை அரசியல் தலைமைகளுக்குண்டு.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஓரு தீர்வு திட்டத்திற்காக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடாத்திவருவதாக தெரிவிக்கும் நிலையிலும் தீர்வு கிடைக்குமா என்பது அவர்களுக்கே தெரியாத நிலையிருக்கின்றது. பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக நடைபெறுவது அவசியமாகும். பேச்சுவார்த்தைகளின்போது விட்டுக்கொடுப்பு என்பதும் மறுக்க முடியாதது.
ஆனால், தமிழ் மக்களின் அடிப்படையான விடயங்களில் விட்டுக்கொடுப்புகளை செய்யாமல் பேச்சுவார்த்தைகளை நடாத்துவது தமிழ் தலைவர்களின் கடமையாகும். ஆனால் அவர்கள் அதனை செய்வார்களா என்பதை காலமே பதில்சொல்லும்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் எங்களுடைய கட்சி மெழுகுதிரி சின்னத்தில் போட்டியிடுகின்றது. இந்த தேர்தலில் தமிழ் சமூக ஜனநாயகக் கட்சியை தமிழ் மக்கள் தங்களுடைய மிக முக்கியமான பிரதிநிதித்துவமாக அங்கீகரிப்பார்கள் என்ற நம்பிக்கையோடும் மக்களின் ஆதரவு எப்போதும் இருக்கும் என்ற நம்பிக்கையோடும் நாங்கள் இந்த தேர்தலில் இறங்கியிருக்கின்றோம்.” என்றுள்ளார்.
-puthinamnews.com