கேட்டலன் தேர்தல்: பெரும்பான்மையை தக்கவைத்த பிரிவினைவாதிகள்

கேட்டலன் பிராந்தியத்துக்கான நாடாளுமன்ற தேர்தலில் பிரிவினைவாத கட்சிகள் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும் நிலையை நோக்கி செல்வதால், ஸ்பெயின் அரசாங்கத்துடன் கூடுதல் மோதல் போக்கு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், கேட்டலோனியா ஸ்பெயினின் பாதி தன்னாட்சி பகுதியாக நீடிக்க விரும்பும் குடிமக்கள் கட்சியே மிகப்பெரிய கட்சியாக உள்ளது.

இதன் விளைவாக, அரசாங்கத்தை அமைப்பதற்கான உரிமை யாருக்கு வழங்கப்படும் என்பதில் குழப்பம் நிலவுகிறது.

கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட கேட்டலோனிய சுதந்திரத்திற்கான பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை சட்டவிரோதமானது என்று அறிவித்த ஸ்பெயின் அரசாங்கம் அப்பிராந்தியத்தின் தன்னாட்சி உரிமையை பறித்ததுடன் புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலையும் அறிவித்தது.

சுமார் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டதில், கேட்டலோனிய சுதந்திர ஆதரவு கட்சிகளான ஒருங்கிணைந்த கேட்டலோனியா, கேட்டலோனியாவின் இடது குடியரசு கட்சி மற்றும் பாப்புலர் யூனிட்டி ஆகியவை இணைந்து மொத்தம் 70 இடங்களை வென்று பெரும்பான்மையை பெற்றுள்ளன

தேர்தல் நிலவரம் குறித்து தற்போது பிரஸ்ஸல்ஸில் தஞ்சமடைந்துள்ள கேட்டலோனியாவின் முன்னாள் அதிபரான பூஜ்டிமோன் கூறும்போது , “கேட்டலன் குடியரசு” வென்றுவிட்டதாகவும், “ஸ்பெயின் அரசு தோற்கடிக்கப்பட்டதாகவும்” கூறியுள்ளார்.

தற்போதைய நிலைமை “திருத்தம், சரிசெய்தல் மற்றும் மீட்புக்கு” வழிவகுத்துள்ளது என்று அவர் கூறினார்.

பூஜ்டிமோன் மீது ஸ்பெயின் வழக்கறிஞர்கள் கலகம் மற்றும் தேசத்துரோக குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

மொத்தம் 135 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் குடிமக்கள் கட்சி 25 சதவீத வாக்குகளை பெற்றதுடன் 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய குடிமக்கள் கட்சியின் தலைவரான ஐன்ஸ் அரிமடாஸ், தனது கட்சி “வெற்றியடைந்துள்ளதாக” தெரிவித்தார். மேலும், கூட்டணி அமைப்பது என்பது “கடினமென்றாலும் அதற்கு முயற்சி செய்வோம்” என்றும் அவர் கூறினார். -BBC_Tamil