ஓநாய்கள், காட்டுபூனை வகை மிருகங்கள் ஆகியவற்றால், கலைமான்கள் வேட்டையாடப்படுவதை தடுக்க, அவைகளுக்கான பாதுகாப்பு சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மிகவும் அடர்ந்த வனங்களில், மேய்ச்சல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு, விலங்குகள் எங்குள்ளன என்பதை தெரிந்துகொள்ளும் முயற்சியை இவை சுலபமாக்குகின்றன.
பெண் கலைமான்களின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள சென்சார்கள் சமிஞ்கைகள், மேய்ச்சல்காரர்களின் கைபேசியோடு இணைக்கப்பட்டுள்ளது. காயமடைந்துள்ள மான்களை விரைவாக கண்டுபிடிக்கவும், இறப்பிற்கான காரணத்தை கண்டறியவும் இவை வழிவகை செய்கின்றன.
அடுத்த ஆண்டு, கலைமான்களை வேட்டையாடும் விலங்குகளை கண்டறியவும், இந்த தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ள குழு திட்டமிட்டுள்ளது.
ஆண்டுதோறும், 10 சதவிகிதம் கலைமான்கள், சாலை விபத்துகளிலும் ஓநாய்களாலும், வோல்வொரின் போன்ற விலங்குகளால் வேட்டையாடப்படுவதாலும் இறக்கின்றன.
கலைமான்களை அதிகம் வேட்டையாடுவது, லிங்ஸ் என்று அழைக்கப்படும் காட்டுப்பூனை வகையே. 2018ஆம் ஆண்டு, இந்த விலங்கை கண்டறிந்து, அவை எந்த சூழலில், கலைமான்கள் குழுவிற்கு அருகில் வருகின்றன என்று அறியப்படவுள்ளன.
கடந்த செப்டம்பர் மாதம், இந்த கலைமான்களுக்கான சென்சார்கள், குறிப்பிட்ட விலங்குகளுக்கு பொருத்தப்பட்டுள்ளன.
இந்த சென்சார்களை, பெண் கலைமான்களின் கழுத்தில் கட்டுவதன் மூலமாக, முழு குழுவும் எங்குள்ளது என்பதை மேய்ச்சல் பணியில் ஈடுபடுபவர்கள் பார்க்க முடியும் என்பதை, அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த சென்சார்கள், ஜி.பி.எஸ் உதவியுடன் இயங்குகின்றன. இவை, கலைமான்கள் எந்த இடத்தில் உள்ளன என்ற சமிக்ஞையை, அதை மேய்க்கும் நபருக்கு தொடர்ந்து அளிக்கின்றன. தனிப்பட்ட தொலைதொடர்பு வசதியோடு வடிவமைத்துள்ளதால், பல்வேறு கலைமான்களின் இருப்பிடத்தை கண்டறிய பல்வேறு கைபேசிகள் தேவைப்படுவதில்லை.
ஃபின்லாந்தின், ஃபின்னிஷ் கலைமான்கள் மேய்ப்பர் சங்கத்தின் தலைவரான, மாட்டி சர்கேலா, “இணைதள பொருட்கள் மீது எங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அதிலுள்ள முக்கிய சவால் என்னவென்றால், இன்றைய சென்சார்கள்கூட, மிகவும் பெரியதாகவே இருக்கின்றன” என்று கூறினார்.
“மேம்படுத்தப்பட்ட இடங்களை கண்டறியும் தொழிநுட்பத்தோடு, குறைந்த செலவில், ஒரு ஆண்டு முழுவதும் வரக்கூடிய சென்சார்கள் நமக்கு தேவை. ஆர்க்டிக் பகுதியின் உயரங்களில், கலைமான்கள் இருக்குமிடங்களை அறிவது மிகக்கடினம். நாங்கள் இப்போது, சிறந்த தொழிநுட்பத்துடன், மேம்படுத்தப்பட்ட சென்சார்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.”
தற்போதுள்ள சென்சார்கள், ஆக்டிலிட்டி என்ற ஃபின்லாந்து நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இதற்கான இணைய வசதியை, டிஜிட்டா என்ற நிறுவனம் அளிக்கிறது.
கலைமான்கள் எங்கு உள்ளன என்பதை பார்க்க உதவும் வரைபட தொழில்நுட்பத்தை மாபிடேர் என்ற மென்பொருளை ஒரு ஆரம்பநிலை நிறுவனம் வழங்குகிறது. இந்த மென்பொருளில் உள்ள வரபடங்கள், அவசர சூழல்களில், கலைமான்களை கண்டறிய உதவுகின்றன.
லாப்லாந்து பகுதியில் கலைமான்களை மேய்த்தல் என்பது பெரிய தொழிலாக உள்ளது. ஆண்டுதோறும் கிட்டத்தட்ட மூன்று லட்சம் கலைமான்கள் மேய்க்கப்படுவதோடு, இதன்மூலம் 25 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான இறைச்சி, தோல் பொருட்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
கலைமான்கள், தனது வாழ்க்கையின் பெரும்பான்மையான நேரத்தை, தனக்கு விருப்பமான காட்டுப்பகுதிகளில் மேய்ந்து திரிவதால், அவற்றிற்கான ஆபத்துகளும் அதிகமாகவே உள்ளன.
கடந்தமாதம், நார்வெவில் நடந்த ரயில் விபத்தில் நூறு கலைமான்கள் கொல்லப்பட்டன.
“இந்த கருவி, கலைமான்களுக்கும், மேய்ச்சல் பணியில் ஈடுபடுபவர்களுக்கும் லாபமாக அமையும்” என்று கூறுகிறார், சர்கேலா.
“காயமடைந்த கலைமான்களை காப்பாற்றுவதும், இறந்தவைகளின் மரணத்தை உறுதி செய்து, அதற்கான இழைப்பீட்டு தொகையை பெறுவதும் பொதுவான விஷயமாக இருந்தாலும், ஆனால், அவற்றை தொடர்ந்து கண்காணிப்பதன்மூலம், அவற்றின் குணாதிசையங்களை புரிந்துகொள்ள முடியும்.”
“இந்த தொழில்நுட்பம், மேய்ச்சல் பணியில் ஈடுபடுவோரின் வாழ்க்கையை சுலபமாக்கும். இளைய தலைமுறையினரிடமும் இந்த பணிகளை மேம்படுத்தி காட்டுகின்றன.” என்றும் கூறினார்.
இந்த குழு, தொழில்நுட்பம் பக்கம் திரும்பியது முதன்முறையல்ல.
பத்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த குழுவினர், ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பொரொக்கெல்லோ என்ற ஒரு செயலியை இந்த குழு உருவாக்கியது. இதன்மூலம், சாலையில் கலைமான்களை கடந்துசெல்லும் வாகன ஓட்டிகள், மற்றவர்களுக்கு எச்சரிக்கையும் தகவலையும் அளிக்க முடியும். -BBC_Tamil