மன்னிப்பு கேட்பதால் மட்டும் கடந்தகாலக் குற்றங்களிலிருந்து விடுபட முடியாது

டாக்டர்  மகாதிர்  நேற்று  மன்னிப்பு   கேட்டுக்கொண்டிருந்தாலும்  மன்னிப்பு  கேட்பதால்  செய்த   தவறுகள்  இல்லை   என்று  ஆகிவிடாது   என   அரசமைப்புச்   சட்ட   வல்லுனர்  அப்துல்  அசீஸ்  பாரி   கூறினார்.

“முன்னாள்  பிரதமர்   மகாதிர்   தம்  காலத்தில்   நிகழ்ந்த   தவறுகளுக்கு   மன்னிப்பு   கோரியதால்  மட்டும்   அவர்  காலத்திய  தவறுகளிலிருந்து  விடுபட்டவர்  ஆகிவிட  முடியாது.

“தவறுகளை   ஒப்புக்கொண்டதும்   சரி,  மன்னிப்பு   கேட்டதும்   சரி    எல்லாமே   அடிப்படையில்   அரசியல்   சார்ந்தது”,  என  அசீஸ்  நேற்றிரவு   ஓர்   அறிக்கையில்   கூறினார்.

அதிகாரமீறல்  விவகாரங்களில்     மன்னிப்பு   கேட்பது    மட்டுமே  ஒருவரை   அவருடைய  பொறுப்பிலிருந்து   விடுவித்து  விடாது.

“அதிகாரமீறல்கள்   நிகழ்ந்த  இடங்களில்,   எடுத்துக்காட்டுக்கு  உள்நாட்டுப்   பாதுகாப்புச்  சட்ட(ஐஎஸ்ஏ)த்தின்கீழ்     ஒருவர்    தடுப்புக்  காவலில்   வைக்கப்பட்டிருந்தால்  அல்லது   அவருக்கு   எதிராகக்  கிறிமினல்   குற்றமிழைக்கப்பட்டிருந்தால்  பாதிக்கப்பட்டவர்   அதற்கெதிராக   சட்ட   நடவடிக்கை   எடுக்கலாம்.

“அந்தத்   தவற்றைச்   செய்தவர்கள்  நீதிமன்றத்தில்   நிறுத்தப்பட்டு   செய்த  குற்றத்துக்குப்  பொறுப்பேற்கும்படி   செய்ய   வேண்டும்.

“அவர்கள்   மன்னிப்பு   கேட்டு   குற்றத்துக்குப்  பொறுப்பு  ஏற்காமல்  தப்பித்துக்கொள்ள   முடியாது”,  என்றார்.

நேற்று,  பெர்சத்து   கட்சி    ஆண்டுக்கூட்டத்தில்   உரையாற்றிய  மகாதிர்   தம்  ஆட்சிக்காலத்தில்     தவறுகள்    செய்யப்பட்டிருந்தால்   அதற்காக   மன்னிப்பு  கேட்டுக்கொள்வதாகக்  கூறினார். பின்னர்   செய்தியாளர்களிடம்  பேசிய   மகாதிர்  மன்னிப்பு   கேட்பது   மலாய்க்  கலாச்சாரத்தில்  உள்ள  “வழக்கம்”   என்றார்.

மகாதிர்   காலத்தில்   நிகழ்ந்த   தவறுகளுக்குப்   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்கும்தான்   பொறுப்பேற்க   வேண்டும்   என   அசீஸ்   குறிப்பிட்டார்.

“மகாதிர்  அமைச்சரவையில்   இருந்தவர்   என்பதால்   நஜிப்பும்   அதற்குப்  பொறுப்பேற்கத்தான்   வேண்டும்.

”அந்தத்  தவறுகளைப்  பயன்படுத்தி   நஜிப்   அரசியல்    ஆதாயம்   காண  முடியாது”,  என்றாரவர்.