புராதன பௌத்த சின்னம் என்ற பெயரில் சம்பூரில் முருகன் ஆலயத்தை ஆக்கிரமிக்க முயற்சி

திருகோணமலை- சம்பூர், சூடைக்குடா பகுதியில் புராதன பௌத்த எச்சங்கள் இருப்பதாக கூறி, முருகன் ஆலயம் அமைந்துள்ள பகுதியை சிறிலங்காவின் தொல்பொருள் திணைக்களம் விரைவில் சுவீகரிக்கவுள்ளது.

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் பேராசிரியர் மந்தவெல, இதனைத் தெரிவித்துள்ளார்.

“சம்பூர் சூடைக்குடா செதிய அமைந்துள்ள பகுதியை பாதுகாப்பதற்காக அந்தப் பகுதி விரைவில் தொல்பொருள் திணைக்களத்தினால் சுவீகரிக்கப்படவுள்ளது.

கிழக்கில் மத மற்றும் தொல்பொருள் சின்னங்களை அடையாளம் காணும் நடவடிக்கையின் போதே, பழைமையான பௌத்த வழிபாட்டு சின்னம் சம்பூரில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தப் பிரதேசம் தொல்பொருள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என திணைக்களம் பிரகடனம் செய்வதற்கு முன்னரே, பௌத்த வழிபாட்டு சின்னம் (செதிய) மற்றும் அதன் சுற்றுப் பகுதி்கள் அழிக்கப்பட்டு விட்டன.

இந்தப் பகுதியை தொல்பொருள் திணைக்களம் பொறுப்பேற்ற பின்னர், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழைமையான சம்பூர் செதிய தொடர்பாக மேலதிக அகழ்வாய்வு மற்றும் அளவீடுகள் நடத்தப்படும்.

சிறிலங்காவில் எல்லா சமூகங்கள் மற்றும் மதங்கள் தொடர்பாக இரண்டரை இலட்சம் வரையான மத, கலாசார, தொல்பொருள் முக்கியத்தவம் வாய்ந்த இடங்கள் உள்ளன.

இவற்றைப் பாதுகாப்பது தொல்பொருள் திணைக்களத்தின் கடமையாகும். அடுத்த தலைமுறைக்காக இவற்றை பேணி பாதுகாக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, சூடைக்குடாவில் உள்ள மத்தளமலையில் அமைந்துள்ள முருகன் கோவில் பகுதியையே தற்போது, பழைமையான பௌத்த சின்னம் அமைந்துள்ளதாக தொல்பொருள் திணைக்களமும், பௌத்த பிக்குகளும் உரிமை கோரத் தொடங்கியுள்ளனர்.

இந்த ஆலயத்தில் பொங்கலிட்டு வழிபாடு செய்து கொண்டிருந்த மக்களை சில நாட்களுக்கு முன்னர் கிழக்கு மாகாண ஆளுனர் றோகித போகொல்லாகமவுடன் சென்ற அவரது மனைவி தீப்தி போகொல்லாகம அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

ஆலய மரபுகளை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்த பொதுமக்களை அவர் கோபத்துடன், உங்களை அழித்து விடுவேன் என்று எச்சரித்திருந்தார்.

அத்துடன், ஆலயத்தின் கட்டுமானப் பணிகளையும் இடைநிறுத்த ஆளுனர் றோகித போகொல்லாகம  உத்தரவிட்டுள்ளார்.

நூறு ஆண்டுகளுக்கு மேலாக பராமரிக்கப்படும் இந்த முருகன் ஆலயத்தில், ஏழு தலைமுறைகளாக தமது முன்னோர்களால் பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அங்கு பூஜை நடத்தி வரும் குருக்கள் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த ஆலயம் 2014ஆம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

-puthinappalakai.net

TAGS: