பெண்கள் அரசியலில் ஈடுபடத் தயங்குவது ஏன்?

நீங்கள் குதிரையை தண்ணீர் குடிக்கக் கொண்டுவர முடியும், ஆனால் உங்களால் அதைக் குடிக்க வைக்க முடியாது. இதேபோன்றே, சிறிலங்காவில் செயற்படும் அரசியற் கட்சிகள், பொது அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள் போன்றன இந்த நாட்டின் ஜனநாயக ஆட்சி நிறுவகங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதில் வெற்றி பெற்றாலும் கூட, தகைமைபெற்ற பெண் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதென்பது  சாத்தியமற்றது.

இந்த கசப்பான உண்மையை, கடந்த வார உள்ளூராட்சித் தேர்தல்களுக்கான வேட்பு மனுத்தாக்கல்கள் உறுதிப்படுத்துகின்றன.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பெண்களின் இடஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை அனைத்து அரசியற் கட்சிகளும் ஆதரித்திருந்ததுடன் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் பெண் பிரதிநிதிகளும் மகிழ்ச்சியடைந்திருந்தனர். அரசியலில் பெண்களுக்கான இடஒதுக்கீடு வலியுறுத்தப்பட்டு பல ஆண்டுகளாக இது தொடர்பாக பரிந்துரைக்கப்பட்ட போதிலும் கடந்த காலத்தில் ஆட்சி செய்த பல்வேறு அரசாங்கங்களும் இது தொடர்பில் ஆக்கபூர்வமான தீர்மானத்தை எட்டவில்லை.

இந்நிலையில் உள்ளூராட்சிச் சபைத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், நீண்ட காலமாக முடிவு எட்டப்படாது கிடப்பில் போடப்பட்ட பெண்களுக்கான இடஒதுக்கீட்டு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதால் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் பெண் அரசியல்வாதிகளான சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே, தலதா அத்துக்கோரள, சந்திராணி பண்டார, சிரியானி விஜேயவிக்கிரம, பவித்திரா வன்னியாராச்சி, ஹிருணிக்கா பிறேமச்சந்திர மற்றும் ஏனையோர் மகிழ்ச்சியால் ஆரத்தழுவிக் கொண்டனர்.

இந்தச் சம்பவமானது மார்ச் 09, 2010ல் இந்தியாவின் மாநிலங்களவையால் (ராஜ்ய சபை) பெண்களுக்கான இடஒதுக்கீட்டுச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட போது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா ஸ்வராஜ் மற்றும் அப்போதைய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியும் உணர்ச்சி பொங்க ஒருவரையொருவர் ஆரத்தழுவிக் கொண்ட சம்பவத்தை நினைவுபடுத்தியது.

மாகாண சபைத் தேர்தல்களில் பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான மாகாண சபைத் தேர்தல்களுக்கான சட்ட மூலத்தின் அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், பிரதேச சபைகள், மாநகர சபைகள் மற்றும் நகர சபைகள் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்கள் போன்றன குறைந்தது 25 சதவீதமான பெண் வேட்பாளர்களைக் கொண்டிருக்க வேண்டும் என 1988ல் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைத் தேர்தல்களுக்கான சட்டமூலத்தின் இரண்டாம் இலக்க வரைபில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டமூலத்தில் குறிக்கப்பட்டவாறு பெண்கள் பிரதிநிதிகளுக்கான இடஒதுக்கீட்டைப் பின்பற்றாத வேட்புமனுக்கள் தற்போது இடம்பெறவுள்ள உள்ளூராட்சிச் சபைத் தேர்தல்களில் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மகரகம நகர சபைக்கான தேர்தலில் பெண்கள் இடஒதுக்கீடு பின்பற்றப்படாததால் இந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதை நாங்கள் அறிந்தோம்.

அரசியலில் தீர்மானங்களை எடுக்கும் அமைப்புக்களில் பெண்கள் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படுவதை சிறிலங்கா அரசாங்கமானது கொள்கைத் தீர்மானமாக எடுத்துள்ளது. இதன் முதலாவது நகர்வாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் சிறிலங்கா அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட உள்ளூராட்சிச் சபைக்கான தேர்தல் சட்டத்தின் மூலம் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் பெண் பிரதிநிதிகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாகாணசபைத் தேர்தல்களில் பெண் பிரதிநிதிகளுக்கான இடஒதுக்கீடானது இதுவரை 4 சதவீதமாக இருப்பதாக தேர்தல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிறிலங்காவானது உலகின் முதலாவது பெண் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்கவை 1960ல் தெரிவு செய்ததுடன் இவரது மகளான சந்திரிக்கா பிரதமராகவும் பின்னர் நிறைவேற்று அதிபராகவும் பதவி வகித்த பெருமையைக் கொண்டிருந்தாலும் கூட, சிறிலங்கா நாடாளுமன்றில் பெண் பிரதிநிதித்துவம் 5 சதவீதத்தை விடக் குறைவாகவே காணப்படுகின்றது.

பெரும்பாலான தென் ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது சிறிலங்காவின் அரசியலில் அங்கம் வகிக்கும் பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகும். சிறிலங்கா வேறு பல விடயங்களிலும் உயர்வுச் சுட்டிகளைக் கொண்டுள்ள போதிலும், நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் பெண் அரசியல்வாதிகள் 5 சதவீதத்தை விடக் குறைவாகவே காணப்படுகிறது.

நேபாளத்தில் அங்கம் வகிக்கும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 33.2 சதவீதமாகவும், பங்களாதேசில் 19.7 சதவீதமாகவும் இந்தியாவில் 10.9 சதவீதமாகவும் காணப்படுகின்றது. ஆனால் இந்த நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது சிறிலங்காவின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும்.

அரசியல் விழிப்புணர்வு குறைவாக உள்ளமை மற்றும் இவ்வாறான அரசியலில் பங்கெடுப்பதற்கான பெண்களின் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளமை போன்ற காரணிகள் சிறிலங்காவின் அரசியலில் பெண் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளமைக்கான காரணமாக இருக்க முடியாது.

ஏனெனில் சிறிலங்காவில் வாழும் பெண்கள் அரசியல் விழிப்புணர்வைக் கொண்டுள்ளனர், ஆனால் இவர்கள் அரசியலிற்குள் நுழைவதற்குத் தயக்கம் காண்பிக்கின்றனர். ஏனெனில் அரசியல்வாதிகள் தொடர்பாக சமூகத்தில் நிலவும் கருத்துக்களே பெண்கள் அரசியலிற்குள் நுழைவதில் தயக்கம் காண்பிப்பதற்கான காரணியாகும்.

அரசியல் பரப்புரைகள் பொதுவாக ஆண்களால் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் இந்தப் பரப்புரைகளில் அத்துமீறிய செயல்கள் மேற்கொள்ளப்படுவதுடன், மதுபான விநியோகங்கள் மற்றும் கைகலப்புக்கள் போன்ற தீய செயல்களும் இடம்பெறுவதால் இங்கு ஒழுக்கமான ஆண்மகன் கூட ஒழுக்கமான பெண்களைப் பற்றிப் பேசுவதற்கான ஒரு இடமாக அரசியல் காணப்படவில்லை என்கின்ற பொதுவான கருத்து மக்கள் மத்தியில் நிலவுகிறது.

தன்னார்வத் தொண்டு அடிப்படையிலும் பல்வேறு சமூக சேவைகள் ஊடாகவும் சமூகத்தில் சிறந்த பணிகளை ஆற்றும் பெண்கள் கூட தங்களால் சிறந்த அரசியல் பரப்புரைகளை மேற்கொள்வதற்குத் தகுதியைக் கொண்டுள்ளோம் எனக் கருதுவதில்லை. வெற்றிகரமான தேர்தல் பரப்புரையை மேற்கொள்வதற்கான அரசியல் அறிவையும் இயலுமையையும் பெண்கள் கொண்டிருக்கவில்லை எனக் கூறுவது தவறானது.

எமது நாட்டில் கல்வித் துறையில் பெண்கள் முன்னணி வகிக்கின்றனர். குறிப்பாக தரம் 05ல் இடம்பெறும் புலமைப்பரிசில் பரீட்சை தொடக்கம் க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளிலும் பெண்களில் உயர் பெறுபேறுகளைப் பெறுகின்றனர். கடந்தவாரம் வெளியிடப்பட்ட தரம் 06 மாணவர்களை உள்ளெடுப்பதற்கான வெட்டுப் புள்ளியானது றோயல் மற்றும் ஆனந்தா ஆண்கள் பாடசாலைகளை விட பெண்கள் பாடசாலையான விசாகா வித்தியாலயத்திற்கு அதிகமாகக் காணப்படுகிறது.

கடந்த சில பத்தாண்டுகளாக, பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவிகளின் எண்ணிக்கை, மாணவர்களின் எண்ணிக்கையை விட அதிகமானதாகும். ஆகவே இவற்றை வைத்துப் பார்க்கும் போது, நாட்டின் தேசிய கொள்கையை வரையறுப்பதற்குப் போதியளவு திறனையும் அறிவையும் பெண்கள் கொண்டிருக்கவில்லை என எவரும் கூறமுடியாது.

இதேவேளையில், பெரும்பாலான அரசியற் கட்சிகள் பெண்களை வேட்பாளர்களாக நியமிப்பதற்குத் தயங்குகின்றன. ஆண் பிரதிநிதிகளை வேட்பாளர்களாக நியமிப்பதன் மூலம் அவர்களால் வெற்றிகரமான தேர்தல் பரப்புரையை மேற்கொள்வதற்கான தகைமையைக் கொண்டிருக்க முடியும் என அரசியற் கட்சிகள் கருதுகின்றன.

பிரதேச சபையில் இரண்டு அல்லது மூன்று ஆசனங்களை மட்டுமே பெறக்கூடிய சிறிய கட்சிகள் தமக்கு வாக்குகளைப் பெற்றுத் தரக்கூடிய பெண் பிரதிநிதிகளைத் தேடிக்கண்டுபிடிப்பதில் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திப்பதாக இறுதியாக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.

‘தெளிவான’ ‘தூய்மையான’ வேட்பாளர்களை நியமிப்பது அவசியமானது என அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஆகவே இதன் மூலம் அரசியல்வாதிகள் தொடர்பான பொதுவான கருத்துரு மாற்றமுற்று புதிய அரசியல் கலாசாரம் ஒன்று தோன்றுவதற்கான சாத்தியம் உருவாகலாம். இவ்வாறானதொரு புதிய மாற்றத்தின் மூலம் தேவையான எண்ணிக்கையான தகைமை பெற்ற பெண்கள் அரசியலிற்குள் நுழைவதை எதிர்பார்க்க முடியும்.

ஆங்கிலத்தில் – Sugeeswara Senadhira
வழிமூலம்       – Ceylon today
மொழியாக்கம்- நித்தியபாரதி

TAGS: