இரானில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
“பல்வேறு நகரங்களில் நேற்றிரவு நடைபெற்ற போராட்டங்களில், துரதிஷ்டவசமாக சுமார் 10 பேர் உயிரிழந்ததாக” செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வியாழக்கிழமை, போராட்டம் தொடங்கியதில் இருந்து குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, இரான் அதிபர் ஹசன் ரூஹானி அமைதிக்கு அழைப்பு விடுத்தும்கூட போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன.
அவர் முதலில் இப்பிரச்சனையில் தலையிடும்போது, போராட்டங்கள் வன்முறையாக மாறுவதை பொறுத்துக் கொள்ள முடியாது என்றார்.
இரானின் பொருளாதார சூழல், வெளிப்படைத் தன்மையின்மை மற்றும் ஊழல் குறித்து ஒப்புக்கொண்ட ரூஹானி, தன் நிலையை பாதுகாத்துக் கொண்டார்.
“நாட்டின் பொருளாதார பிரச்சனைகளை சரி செய்ய மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பணியாற்ற வேண்டும்” என்றார் அவர்.
நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகைக்கும் வகையில், அரசை விமர்சிக்கவும், போராட்டங்கள் நடத்தவும் மக்களுக்கு உரிமை உள்ளது என்று கூறிய அவர், வன்முறை சம்பங்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்திருந்தார்.
எனினும், போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்ற டெஹரானில் உள்ள இன்ஹெலப் சதுக்கத்தில் நடைபெற்ற பேரணியை, கண்ணீர் புகைகுண்டுகள் வீசி காவல்துறையினர் கலைத்ததாக ஏ எஃப் பி செய்தி நிறுவனம் கூறுகிறது.
குறையும் வாழ்க்கைத்தரம், உணவுப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை வலியுறுத்தி கடந்த வியாழக்கிழமையன்று மஷாத் என்ற இடத்தில் தொடங்கிய போராட்டம் பின்னர் பல நகரங்களுக்கு பரவின.
போராட்டம் ஆரம்பமானது முதல் இரான் தலைவர்களை விமர்சித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்வீட் செய்து வருகிறார்.
இந்நிலையில் உணவு மற்றும் சுதந்திரத்திற்கான பசியில் இரானிய மக்கள் உள்ளனர் என்றும், இது மாற்றத்திற்கான நேரம் என்றும் டிரம்ப் ட்விட் செய்துள்ளார். -BBC_Tamil