அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபாடு காட்டாத பாலத்தீனத்திற்கு அமெரிக்கா அளித்து வரும் உதவிகள் நிறுத்தப்படலாம் என்று அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் கணக்கில் பாகிஸ்தானை மேற்கோள் காட்டி டிரம்ப், “பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, பல நாடுகளுக்கு எந்த பலனும் இல்லாமல் நாம் பல பில்லியன் டாலர்கள் அளித்து வருகிறோம். உதாரணமாக நாம் பாலத்தீனத்திற்கு வருடாவருடம் பல மில்லயன் டாலர்கள் அளித்து வருகிறோம். அதற்கு பதிலாக நாம் பெற்றது, நன்றியின்மையும், மரியாதையின்மையும்.
அவர்களுக்கு இஸ்ரேலுடனான அமைதி உடன்படிக்கை பேச்சுவார்த்தையிலும் ஈடுபாடு இல்லை” என்ற தொனியில் பதிவிட்டு இருந்தார்.
அமெரிக்கா அண்மையில் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசேலத்தை அறிவிக்கும் முயற்சியில் இறங்கியது.
ஆனால், இது ஐ.நா -வில் கடுமையான கண்டனத்திற்கு உள்ளானது. 128 நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்தன.
ஒரு நடுநிலையான மத்தியஸ்தராக அமெரிக்காவால் இருக்க முடியாது என்பதனை அமெரிக்காவின் இந்த நகர்வு காட்டுகிறது என்று பாலஸ்தீனம் கூறி இருந்தது.
கடந்த ஆண்டு டிசம்பரில் அமெரிக்கா ஜெருசேலத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவிக்கும் முயற்சியில் இறங்கியதும், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், “மத்திய கிழக்குக்கான அமெரிக்காவின் எந்த அமைதி திட்டத்தையும் ஏற்கமாட்டேன்”என்று கூறி இருந்தார். -BBC_Tamil