இரானில் கடந்த ஒருவாரமாக அலையலையாக நடந்த அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அரசுக்கு எதிரான கிளர்ச்சி என்று வருணித்த இரான் ராணுவத் தளபதி ஜெனரல் முகமது அலி ஜஃபாரி, தற்போது கிளர்ச்சி முறியடிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இரானில் நிலவிவந்த அமைதியற்ற நிலையை எதிர்கொள்வதற்காக அரசுக்கு ஆதரவான பேரணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பத்தாயிரக்கணக்கானோர் நாடெங்கும் புதன்கிழமை அரசுக்கு ஆதரவான பேரணிகளில் ஈடுபட்ட நிலையில், ஜஃபாரியின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
மாஷாத் மாநகரில் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய அரசு எதிர்ப்புப் போராட்டங்களில் 21 பேர் கொல்லப்பட்டனர். முதலில் விலைவாசி உயர்வுக்கும், ஊழலுக்கும் எதிராகத் தொடங்கிய போராட்டங்கள் பிறகு விரிவான அரசு எதிர்ப்புப் போராட்டங்களாக வடிவெடுத்தன.
2009 அதிபர் தேர்தலுக்குப் பிறகு நடந்த பெரிய போராட்டங்கள் இவை.
பாரசீக நாட்காட்டியில் இது 1396-ம் ஆண்டு. எனவே, “இன்று நாம் 96-ம் ஆண்டின் அரசு எதிர்ப்புக் கிளர்ச்சி முடிவுக்கு வந்ததாகச் சொல்லலாம்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“பாதுகாப்பு தயாரிப்பு நிலையும், மக்களின் விழிப்புணர்வும் எதிரிகளின் தோல்விக்கு வழி வகுத்தன. புரட்சிகரக் காவல்படை (ராணுவம்) மூன்று மாகாணங்களில் குறைந்த அளவே தலையிட்டது. பிரச்சினை ஏற்பட்ட எந்த ஒரு இடத்திலும் 1,500க்கு மேற்பட்டவர்கள் இல்லை. மொத்தத்தில் நாடு முழுவதிலும் பிரச்சினை செய்தவர்கள் எண்ணிக்கை 15,000க்கு அதிகமில்லை,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
யார் காரணம்?
புரட்சி எதிர்ப்பாளர்கள், முடியரசு ஆதரவாளர்கள், இரானில் கலவரம், அராஜகம், பாதுகாப்பின்மை, தலையீடு ஆகியவற்றை உருவாக்குவதற்காக முன்னாள் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹிலரி கிளிண்டனால் அறிவிக்கப்பட்டது என்று அவர் குறிப்பிடுகிற சக்திகள் ஆகியவையே இந்த அரசு எதிர்ப்புக் கிளர்ச்சிக்குக் காரணம் என்று ஜஃபாரி தெரிவித்தார்.
இஸ்லாமிய இரானுக்கு எதிராக பண்பாட்டு, பொருளாதார மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்த எதிரிகள் முயன்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வெளிப்படையாக யாரையும் சொல்லாமல் ‘எதிரிகள்’ என்று அந்நாட்டின் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கடந்த செவ்வாய்க்கிழமை கூறியது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் சௌதி அரேபியாவை குறிப்பதாகும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதே நேரம் போராட்டங்களுக்குக் காரணம் என்று ராணுவத் தளபதி கூறியுள்ள ‘முன்னாள் அதிகாரி’ என்ற சொற்பிரயோகம் முன்னாள் அதிபர் முகமது அகமதினிஜாதைக் குறிப்பது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அரசுத் தொலைக்காட்சி நேரலையாக ஒளிபரப்பிய அரசுக்கு ஆதரவான போராட்டங்களில் பங்கேற்றவர்கள் இரான் கொடிகளையும், அயதுல்லா அலி கமேனியின் படங்களையும் தாங்கிச் சென்றனர். கோம் நகரில் நடந்த அரசுக்கு ஆதரவான பேரணியில் “அமெரிக்கக் கூலிப்படையினருக்கு மரணம்” என்ற முழக்கம் எழுந்தது.
போராட்டங்கள் இன்னும் நடக்கின்றனவா?
அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் குறைந்துவிட்டதாக செய்திகள் வந்தாலும், இரானின் தெருக்களில் என்ன நடக்கிறது என்பதை உறுதி செய்வது கடினமாக உள்ளது. இஸ்ஃபஹான் மாகாணத்தில் ஒரு வங்கியின் மீதும், காவல் நிலையம் ஒன்றின் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், ஆனால், உயிரிழப்புகள் ஏதுமில்லை என்றும் அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. -BBC_Tamil