சிரியாவின் இருவேறு பகுதிகளில் இரு வேறு நேரங்களில் இடம்பெற்ற வெவ்வேறான இரு தாக்குதல்களில், குறைந்தது 23 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு, 7 ரஷ்ய விமானங்கள் அழித்தொழிக்கப்பட்டன.
போராளிகளால் கட்டுப்படுத்தப்படும், சிரியாவின் கிழக்குப் பகுதி நகரான கௌட்டாவில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதல்களில், குறைந்தது 23 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
மிஸ்ரபா என்ற நகரில், ரஷ்யாவால் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல்களில், 3 சிறுவர்கள், 11 பெண்கள் உள்ளடங்கலாக, 18 பேர் கொல்லப்பட்டனர் என, மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்தது. இன்னும் பலர், இத்தாக்குதல்களில் காயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், எத்தனை பேர் காயமடைந்தனர் என்ற விவரம், இதுவரை உறுதிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
புதன்கிழமை உயிரிழந்த ஏனைய 5 பேரும், அரசாங்கப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதல்களால் கொல்லப்பட்டனர் என, கண்காணிப்பகம் மேலும் குறிப்பிட்டது.
இதேவேளை, சிரியாவின் ஹமெமிம் விமானத் தளம் மீது, கடந்த டிசெம்பர் 31ஆம் திகதி நடத்தப்பட்ட ஷெல் தாக்குதல்களிலேயே, 7 ரஷ்ய விமானங்கள் அழிக்கப்பட்டன. இத்தாக்குதல் தொடர்பான விவரங்களை, ரஷ்யாவின் ஊடகங்கள், நேற்று முன்தினம் இரவே வெளியிட்டன.
எதிரணிப் போராளிகளாலேயே, இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்று உறுதிப்படுத்தப்படுகிறது. விமானங்களுக்கு மேலதிகமாக, குண்டுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பகுதியொன்றும் முழுதாக அழிவடைந்தது.
2015ஆம் ஆண்டில், சிரியா மீதான தாக்குதல்களை ரஷ்யா ஆரம்பித்த பின்னர், போர் உபகரணங்கள் என்ற அடிப்படையில், அந்நாட்டுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாக, இந்த இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
அதே 31ஆம் திகதி, ரஷ்யாவின் ஹெலிகொப்டர் ஒன்றும் விபத்துக்குள்ளாகியிருந்ததோடு, விமானிகள் இருவரும் உயிரிழந்திருந்தனர். ஆனால் அவ்விபத்து, தொழில்நுட்பக் காரணங்களுக்காகவே இடம்பெற்றது என்று அறிவிக்கப்பட்டிருந்ததோடு, அது தொடர்பான உறுதிப்படுத்தலை, உடனடியாகவே ரஷ்யா வெளியிட்டிருந்தது.
-tamilmirror.lk