வடமேற்கு சிரியாவின் போராளிகள் வசம் இருக்கும் இட்லிப் நகரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 23 பேர் இறந்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது. பலர் காயமடைந்துள்ளனர்.
சிறிய கிளர்ச்சி பிரிவின் தலைமையிடத்தில் இந்தக் குண்டு வெடிப்பு நடந்ததாக பிரிட்டனை சேர்ந்த மனித உரிமைக்கான சிரியா கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இறந்தவர்களில் ஏழு பேர் பொது மக்கள் என நம்பப்படுகிறது.
குண்டுவெடிப்புக்கான காரணம் இன்னும் தெளிவாகவில்லை. இது கார் வெடிகுண்டு என சில தகவல்கள் கூறுகின்றன. மற்றவர்கள் இதனை ஆளில்லா விமானத் தாக்குதல் என கூறுகின்றனர்.
தேசமடைந்த கட்டடங்கள் மற்றும் வீடுகளில் இருந்து இறந்தவர்களையும், காயமடைந்தவர்களை மீட்கும் பணி நடந்துவருகிறது என மனித உரிமைக்கான சிரியா கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.
அஜ்னத் அல் கவாஸ்கு குழு என்ற பெயரை கொண்ட போராளிக்குழுவில், நூற்றுக்கணக்கான போராளிகள் உள்ளனர்.சிரிய ராணுவத்திற்கு எதிராக இக்குழு சண்டையிட்டு வருகிறது.
துருக்கி எல்லையில் இருக்கும் இட்லிப் மாகாணம், அதிபர் பஷார் அல் அஸாத்தை எதிர்க்கும் படைகளில் கடைசி முக்கிய கோட்டைகளில் ஒன்றாகும்.
2015-ம் ஆண்டு இங்கு நடந்த சண்டையில், போராளி குழுவிடம் சிரிய ராணுவம் தோற்றது. சிரிய அரசை எதிர்க்கும் குழுவின் முழு கட்டுப்பாட்டின்கீழ் வந்த ஒரே மாகாணமாக இட்லிப் மாறியது.
இட்லிப் மற்றும் அண்டை ஹமா மாகாணத்தை மீட்பதற்கு சிரியாவும் அதன் கூட்டாளிகளும் உறுதியேற்றனர்.
-BBC_Tamil