தனது சுதந்திரத்தை பிரகடனம் செய்துகொண்டபின், முதல் முறையாக ஆஃப்பிரிக்க நாடான சோமாலிலாந்து பாலியல் வல்லுறவுக்கு எதிராக சட்டம் இயற்றியுள்ளது.
சமூகத்தால் அவமானப்படுத்தப்படுவதைத் தவிர்க்க, வன்கொடுமை செய்த ஆணுக்கே, பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இதுவரை அங்கு நிலவி வந்தது.
தற்போது இயற்றப்பட்டுள்ள சட்டத்தின்படி பாலியல் வன்கொடுமை செய்யும் நபர்கள் குறைந்தபட்சம் 30 ஆண்டுகளை சிறையில் கழிக்க வேண்டியிருக்கும்.
சோமாலியா நாட்டிலிருந்து பிரிந்து, 1991-ஆம் ஆண்டிலேயே தன்னை சுதந்திர தனி நாடு என்று தன்னை சோமாலிலாந்து பிரகடனம் செய்துகொண்டாலும், சர்வேதேச நாடுகளால் அந்நாடு தனிநாடாக இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை.
இதுவரை சோமாலியாவில் பாலியல் வல்லுறவுக்கு எதிரான சட்டம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகரித்துவரும் பாலியல் வல்லுறவுக் குற்றங்களைத் தடுக்க இந்தப் புதிய சட்டம் உதவும் என்று சோமாலிலாந்து நாடாளுமன்றத்தின் அவைத்தலைவர் பாஷே மொகமத் ஃபாரா பிபிசியிடம் தெரிவித்தார்.
“தற்போது கூட்டுப் பாலியல் வல்லுறவுகளும் நடக்கின்றன. பாலியல் குற்றங்களை முழுமையாகத் தடுப்பதே இச்சட்டத்தின் நோக்கம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
குழந்தைகள் மற்றும் பெண்கள் உரிமை அமைப்புகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தியதன் பின்னர் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக இத்தகைய சட்டம் ஒன்றுக்குக் காத்திருந்தததாக ‘உமென்’ஸ் அஜெண்டா ஃபோரம்’ எனும் பெண்கள் அமைப்பைச் சேர்ந்த ஃபைசா அலி யூசுஃப் பிபிசியிடம் கூறினார்.
செயல்படும் நிறுவனங்களைக் கொண்ட ஜனநாயகத்தை உடைய நாடாக, சர்வதேச சமூகத்தால் தாம் பார்க்கப்படவேண்டும் என்ற நோக்கத்துடன், தம்மைத் தனி நாடாக அறிவித்துக்கொண்ட சோமாலிலாந்து இந்தப் புதிய சட்டத்தை இயற்றியுள்ளது என்று பிபிசியின் ஆன் சோய் கூறுகிறார். -BBC_Tamil