இரான் போராட்டக்காரர்களை விடுதலை செய்ய அமெரிக்கா வலியுறுத்தல்

இரானில் அண்மையில் நடந்த அரசு எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டவர்களை அந்நாட்டில் உள்ள “கொடுமையான” அரசு விடுவிக்கவேண்டும் என்று அமெரிக்கா கோரியுள்ளது.

“அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக் கணக்கானவர்களை இரான் சிறையிலடைத்துள்ளது குறித்து டிரம்ப் நிர்வாகம் ஆழ்ந்த கவலை,” கொண்டிருப்பதாக வெள்ளை மாளிகையில் இருந்து வெளியான செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 1,000 பேர் கைது செய்யப்பட்டதாக இரான் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது. ஆனால், இரானில் இருந்து வரும் தகவல்கள் உண்மையாக கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என்கிறது.

கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களில் பெரும்பாலோர் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும், ஆனால், தூண்டியவர்கள் மட்டுமே சிறையில் இருப்பதாகவும் இரான் தெரிவித்துள்ளது.

2009ம் ஆண்டின் அதிபர் தேர்தலின்போது நடந்த போராட்டங்களுக்குப் பிறகு பெரிய அளவில் நடந்த அரசு எதிர்ப்புப் போராட்டம் இதுதான். தொடக்கத்தில் இப்போராட்டம் விலைவாசி உயர்வுக்கு எதிரான, ஊழலுக்கு எதிரான போராட்டமாகவே தொடங்கியது.

ஆனால், விரைவில் ஆளும் மத குருமார்களுக்கு எதிரான போராட்டமாக, விரிவான அரசெதிர்ப்புப் போராட்டமாக இது உருவெடுத்தது. இப் போராட்டங்களில் பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் நடந்த மோதலில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு எதிராக அரசு ஆதரவுப் பேரணிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. அதிலும் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

இரானுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளில் செய்யப்பட்ட விலக்கினை அமெரிக்கா தொடரவேண்டுமா என்பதை டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்யவேண்டிய காலக்கெடு வெள்ளிக்கிழமை முடிவடைய உள்ள நிலையில் இரான் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளை மாளிகை பத்திரிகை தொடர்புச் செயலாளர் சாரா சாண்டர்ஸ் விடுத்துள்ள இந்த பத்திரிகை செய்தியில், “இரானின் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை அந்நாட்டு சர்வாதிகாரத் தலைமை ஒடுக்குவதைப் பார்த்துக்கொண்டு அமெரிக்கா அமைதியாக இருக்காது. அங்கு நடக்கும் உரிமை மீறல்களுக்கு இரானின் தலைவர்கள் பொறுப்பாளியாக்கப்படுவார்கள்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகள் அனைவரும் உடனே விடுவிக்கப்படவேண்டும் என்று அந்த அறிக்கை வலியுறுத்தியது.

இரானில் நடந்த இந்த அரசெதிர்ப்புப் போராட்டங்கள் பற்றி விவாதிப்பதற்காக அமெரிக்கா அண்மையில் ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவைக் கூட்டியது. ஆனால், இதற்கு ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. -BBC_Tamil