அதிகரிக்கும் பிட்காயின் பயன்பாடு: கட்டுப்படுத்த போராடும் அரசுகள்

உலக அளவில், சட்டரீதியான பணமாக பிட்காயின் இன்னும் தகுதி பெறவில்லை என்றாலும், அதிக அளவில் பிரபலமடைந்துள்ளது. குறிப்பாக ஆசிய-பசிஃபிக் பகுதிகளில், மிக அதிகமாகவே பிரபலமடைந்து இருக்கிறது.

2017இல், இந்த கிரிப்டோ- பணத்தின் மதிப்பில் இருந்த ஏற்றத்தாழ்வுகள், உலக அளவில் பல முதலீட்டாளர்களை இழுத்தது. குறிப்பாக ஆசிய நாடுகளை சேர்ந்த பல முதலீட்டாளர்கள் இதில் இருந்தனர்.

தென்கொரியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள், பிட்காயின்களின் முக்கிய இடங்களாக உள்ளன. சீன அரசு, பிட்காயின்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்புவரை, உலகளவில் தயாரிக்கப்பட்டிருந்த பிட்காயிகளில் 70 சதவிகிதம் சீனாவிடம் இருந்தது.

இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில், சீனா மட்டும் ஈடுபடவில்லை. பிட்காயின்களை வைத்திருப்பதால் வரும் சிக்கல்கள் குறித்து பிற நாடுகளும் கவலை கொண்டுள்ளன.

பல நாடுகள் இதுகுறித்த நெறிமுறைகள் கொண்டுவந்துள்ள நிலையில், இதை முழுமையாக தடை செய்த சில நாடுகளும் இருக்கின்றன.

பிட்காயின் என்றால் என்ன?

பிட்காயின் மட்டுமே உலகிலுள்ள மின்னணு பணம் இல்லை. ஜப்பானில் டோஜிகாயின் உள்ளது. புகைப்பட நிறுவனமான ஈஸ்ட்மேன் கோடாக், தங்களின் சொந்த பணமான கோடாக்காயினை கொண்டுவர திட்டமுள்ளதாக கூறியுள்ளது.

ஆனால், மின்னணு பணங்களில், பிட்காயின்தான், மிகவும் பிரபலமாக உள்ளது. பாரம்பரிய பணங்கள் போல இல்லாமல், இந்த பிட்காயின்கள், இணையதளத்தையே முழுமையாக நம்பியுள்ளன.

பல நாடுகளில், இந்த பணம் சட்டரீதியானது இல்லை என்று கூறினாலும், பாரம்பரிய பணப்பரிவர்த்தனை போலவே இவற்றை வாங்கவும், விற்கவும் முடியும்.

இந்த டிஜிட்டல் பணம், அதற்கே உரிய குறைபாடுகளை கொண்டுள்ளது. ஒழுங்கற்ற வழிமுறைகள், சைபர் தாக்குதல்களுக்கு உள்ளாகக்கூடிய பணமாக உள்ளது. இவற்றை உருவாக்க அதிக மின்சாரமும் தேவைப்படுகிறது.

உலக அரசுகள் எதற்காக, பிட்காயின்கள் மீது கடுமையான விதிமுறைகளை கொண்டுவர முயல்கின்றன என்பது இந்த காரணங்கள் விளக்குகின்றன.

சீனாவின் திட்டம்

இந்த ஜனவரி மாதம், பிட்காயின்களை உருவாக்குவோரின் மின்சார இணைப்பை துண்டிக்க, சீனா முடிவு செய்துள்ளது. இதன்மூலம், நாட்டின் குறைந்த விலை மின்சாரம் தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்கிறது.

டிஜிட்டல் பணங்களை தடுக்க, சீனா எடுத்துவரும் நடவடிக்கைகளின் அண்மை நகர்வு இதுவாகும்.

கடந்த ஆண்டு செப்டம்பரில், சீன அதிகாரிகள், தங்கள் நாட்டில் இயங்கி வந்த, அனைத்து பிட்காயின்களில் பங்குச் சந்தைகளையும் மூடுவதற்கு உத்தரவிட்டனர்.

அதே மாதம், அவர்களின் மத்திய வங்கி, தங்களின் டிஜிட்டல் பணங்களை விற்று, அதன்மூலம் பணத்தை அதிகரிக்க முயன்ற தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை குறித்து கண்டறிய ஆரம்பித்தது. அவ்வாறு செய்வது சட்டவிரோதமானது என்றும் அறிவித்தது.

நெறிமுறைகளை கொண்டுவரும் தென்கொரியா

சீனாவின் நடவடிக்கைகளுக்குப் பிறகு, உலகளவில் மூன்றாவது பெரிய பிட்காயின்கள் கொண்ட சந்தையாக தென்கொரியா மாறியது. கடந்த ஆண்டு, சீனா பின்வாங்கத் தொடங்கியதும், செப்டம்பர் மாதத்தில், ஜப்பான் மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதிக பிட்காயின்களை அது வாங்கியது.

அதுமுதல், அந்நாட்டு அதிகாரிகள், மின்னணு பணங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர்.

கடந்த ஆண்டு செப்டம்பரில், சீனாவைப் போலவே, தென்கொரியாவும், மின்னணு பணத்தை மக்கள் வழங்குவதை தடை செய்தது.

அடுத்த மூன்று மாத்ததில், பிட்காயின்களில் பங்குச் சந்தைகளை மூடுவது குறித்து சிந்தித்து வருவதாக அந்நாட்டு அரசு கூறியதோடு, பெயர் வெளியிடாத டிஜிட்டல் பணங்களின் பரிவர்த்தனையையும் தடை செய்தது.

யூபிட் பங்குச்சந்தை, சைபர் தாக்குதலுக்கு உள்ளானபோது, தனது சொத்தில் 17 சதவிகிதத்தை இழந்ததோடு, பணமில்லாமல் பங்குச்சந்தை மூடப்பட்டது. இந்த நிகழ்வே, அரசு குறிப்பிட்ட நகர்விற்கு காரணமாக அமைந்தது.

இந்த மாத்திலும், அரசு அதிகாரிகள், வாடிக்கையாளர்களுக்கு, மின்னணு பணங்களுக்கான வங்கிக்கணக்கை தொடங்க உதவும் ஆறு வங்கிகளை சோதனை செய்துள்ளது.

டிஜிட்டல் பணத்தில், ஒழுங்குமுறையை கொண்டுவர, சீனா மற்றும் ஜப்பானுடன் இணைந்து செயல்படவும் தென்கொரியா திட்டம் வைத்துள்ளது என்கிறது சோல் நகரைச் சேர்ந்த யோஹப் செய்தி நிறுவனம்.

இந்தோனேஷியாவின் வழிமுறைகள்

டிஜிட்டல் பணம் மூலமாக, தொகைகளை செலுத்துவதை, இந்தோனேஷியாவின் மத்திய வங்கி தடைசெய்துள்ளது. ஆனால், இதன்மூலமாக நடத்தப்படும் பணப்பரிவர்த்தனை மற்றும் மைனிங் என்று குறிப்பிடப்படும், பிட்காயின் தயாரித்தல் முறைகளுக்கு இன்னும் தடைவிதிக்கப்படவில்லை.

இந்த புதிய சட்டம், ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்க வந்துள்ளதாக, ஜப்பானை சேர்ந்த நிக்கை ஏஷியன் ரிவ்யூ தெரிவித்துள்ளது.

எச்சரிக்கும் வங்கதேசம்

கடந்த ஆண்டு, டிசம்பர் மாதத்தில், வங்கதேசத்தின் மத்திய வங்கி, பிட்காயின்களுக்கு தடை விதித்ததாக, உள்ளூர் ஆங்கில பத்திரிக்கையான டாக்கா டிரிபியூன் செய்தி அறிக்கை வெளியிட்டிருந்தது.

பிட்காயின்கள் மூலமாக, பணம் செலுத்துவோர், பண ஏய்ப்பு, பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் ஆகியவை குறித்து அரசு கொண்டுள்ள கொள்கைகளுக்கு எதிராக அவர்கள் நடந்துகொள்வதாக எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிக்கையில் தெரிவித்த்து.

ஆனால், பரிவர்த்தனை மற்றும் மைனிங் ஆகிய விஷயங்களுக்கு வங்கி அனுமதிக்கிறதா என்பதற்கான தெளிவான தகவல்கள் இல்லை.

பிட்காயினை பயன்படுத்துவோர், அரசின் பண ஏய்ப்பு சட்டத்தின்கீழ், 12 ஆண்டுகள் வரை சிறையில் வைக்கப்படுவார்கள் என்று 2014ஆம் ஆண்டு, மத்திய வங்கி தெரிவித்தது. அதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கைகள் நடந்துள்ளன.

எனினும், வங்கி இதுகுறித்து நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், ஜூன் மாதத்தில் ஒரு குழு அமைத்து, கட்டுப்பாட்டு நெறிமுறைகளுடன், வங்கதேசத்தில் பிட்காயின்கள் பயன்படுத்த வழிவகைகள் செய்ய உள்ளதாக, கடந்த டிசம்பர் மாதம், வங்கியின் இணை- இயக்குநர் எஸ்.கே. சுர் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

கொள்கைக்காக காத்திருக்கும் இந்தியா

இந்தியாவில், பிட்காயின்கள் சட்டவிரோதமானவையும் அல்ல, அவற்றின் பரிவர்த்தனையும் முடக்கப்படவில்லை.

எனினும், மத்திய வங்கியும், அரசும், டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் உள்ள சிக்கல்கள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம், டிஜிட்டல் பணத்திற்கான நெறிமுறைகளை கொண்டுவர, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து அரசு மற்றும் மத்திய வங்கியிடம், நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.

வியட்நாமின் நிலைப்பாடு

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்காக, சட்டப்படியான ஒரு வழிமுறையை உருவாக்கும் திட்டத்திற்கு, வியட்நாம் பிரதமர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அனுமதி அளித்தார். இதன்மூலம், மின்னணு பணப்பரிமாற்றத்தை அவர்கள் விரைவில் சட்டரீதியாக்க கூடும் என்ற நம்பிக்கையை அது அதிகரித்துள்ளது.

அவர்களின் பிரதமர் ஃபூக், 2018 ஆம் ஆண்டின் இறுதிக்குள், இந்த பணங்களை நெறிபடுத்தும் திட்டத்தை, பிற அமைச்சர்களுடன் இணைந்து சட்ட அமைச்சகம் செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கூறியிருந்தாலும், அந்நாட்டில் பிட்காயின்களை பயன்படுத்துவது சட்டத்திற்கு புறம்பாணதே. அவ்வாறு செய்வதன் மூலம், 8,800 டாலர்களை வரையில் அபராதம் செலுத்த நேரிடலாம் என்று மத்திய வங்கி அக்டோபர் மாதத்தில், கூறியதாக, வியட்நாம்நெட் பிரிட்ஜ் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

வர்த்தகம் என்பது சற்று தொய்வாக இருந்தாலும், மக்கள் இதன்மீது முதலீடு செய்வதை அது தடுக்கவில்லை.

ஜப்பானின் முடிவு

மற்ற நாடுகள் டிஜிட்டல் பணத்தின்மீது விதிமுறைகளை செலுத்தி வரும் நிலையில், ஜப்பான் அவற்றை இறுக்கப் பிடித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம், பிட்காயினை மக்கள் பொருட்கள் பரிவர்த்தனை மற்றும் சேவைக்காக பயன்படுத்த, சட்டரீதியாக அனுமதி அளித்தது.

ஆனால், பங்குச்சந்தைகள் இவற்றை வைத்து பரிவர்த்தனை செய்ய முறையே உரிமம் பெற வேண்டும். இந்த சட்டத்தின்கீழ், ஒவ்வொறு ஆண்டும் அவர்கள் பரிவர்த்தனை விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.

-BBC_Tamil