பாக்தாத்: இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் 35 பேர் பலி

இராக் தலைநகர் பாக்தாத்தில் நடந்த இரட்டை தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தபட்சம் 35 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த மூன்று நாட்களில் நடந்த இரண்டாவது தாக்குதலாகும்.

அந்நகரத்தின் மையப்பகுதியில் உள்ள டயரன் சதுக்கத்தில் நடந்த இந்த தாக்குதலில் 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஐஎஸ் அமைப்பு கடந்த 2014 ஆம் ஆண்டில் அந்நாட்டின் பெரும்பகுதியை கைப்பற்றியது முதல் பாக்தாத்தில் தொடர்ச்சியாக வெடிகுண்டு மற்றும் ஆயுத தாக்குதல்களுக்கு இலக்காகி வருகிறது.

இந்நிலையில், கடந்த மாதம் அனைத்து பிராந்தியங்களையும் மீட்டெடுத்துவிட்டதாக இராக் அரசாங்கம் அறிவித்ததிலிருந்து தாக்குதல்களின் வேகம் குறைந்துள்ளது.

திங்கட்கிழமை தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு ஆண்கள் வெடிப்பொருட்களை உள்ளடக்கிய ஆடையை அணிந்து இருந்ததாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று தாக்குதல் நடந்த இடமானது தினமும் அதிகளவிலான கட்டட தொழிலாளர்கள் தினமும் காலை நேரத்தில் கூடி வேலை தேடும் இடமாகும்.

இதற்கு முன்னரும் இதுபோன்ற தாக்குதல்கள் இந்த இடத்தில் நடைப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-BBC_Tamil