வாரம் 1,500 ரோஹிஞ்சா அகதிகளைத் திரும்பப் பெற மியான்மர் ஒப்புதல்

மியான்மர் ராணுவத்தின் வன்முறையால், வங்கதேசம் தப்பி சென்ற லட்சக்கணக்கான ரோஹிஞ்சா முஸ்லிம்களை வாரம் 1,500 பேர் என்ற விகிதத்தில் திருப்பி அழைத்துக்கொள்ள மியான்மர் ஒப்புக்கொண்டுள்ளது.

அதே நேரம், அகதிகள் அனைவரையும் இரண்டாண்டுகளில் திருப்பி அனுப்பிவிடவேண்டும் என்று தாங்கள் இலக்கு வைத்துள்ளதாக வங்கதேசம் தெரிவித்துள்ளது.

2016 முதல் 2017 ஆம் ஆண்டில் ரக்கைன் மாநிலத்தில் நடைபெற்ற வன்முறையால் அருகிலுள்ள வங்கதேசத்திற்கு 7 லட்சத்து 40 ஆயிரத்திற்கு மேலானோர் தப்பி சென்றனர்.

அவர்களை கட்டாயமாக திருப்பி அனுப்புவது தொடர்பாக உதவி நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.

ரோஹிஞ்சா முஸ்லிம்கள் அவர்களாகவே விரும்பி மியான்மருக்கு நாடு திரும்ப வேண்டும் என்றும், நாடு திரும்புபவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் ஐ.நா அகதிகள் உயர் ஆணையம் கூறியுள்ளது.

அனாதைகள் மற்றும் விரும்ப தகாத சம்பவங்களால் (பாலியல் வல்லுறவால்) பிறந்த குழந்தைகளையும், குடும்பங்களையும் ஒன்றாக அனுப்பும் நோக்கம் கொண்டிருப்பதாக, வங்கதேசம் தெரிவித்திருக்கிறது.

ஆனால், மியான்மருக்கு திரும்புவது பற்றி இடம்பெயர்ந்து வாழும் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

“என்ன ஒப்பந்தம் கையழுத்திடப்பட்டுள்ளது என்று எங்களுக்கு இன்னும் தெளிவாக தெரியவில்லை” என்று காக்ஸ் பஜாரிவுள்ள முகாம் ஒன்றின் சமூகத் தலைவர் சிராஜூல் மோஸ்டோஃபா பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

“மியான்மர் அரசு ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்குவதே எங்களது முதல் கோரிக்கை. இரண்டாவது, எங்களுடைய நிலங்களை அவர்கள் திரும்பி தர வேண்டும். மூன்றாவது, சர்வதேச அளவில் எங்களுடைய பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

ரோஹிஞ்சா முஸ்லிம்களை மிகவும் விரைவாக நாடு திரும்ப செய்ய வங்கதேச அரசு விரும்புவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷாஹித்துல் காக்வே பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

“ஒவ்வொரு வாரமும் 15 ஆயிரம் பேரை திருப்பி ஏற்றுக்கொள்ள கேட்டோம். ஆனால், ஒவ்வொரு நாளும் 300 பேரை ஏற்றுக்கொள்வதாக அவர்கள் சொன்னார்கள். எனவே, வாரம் 1500 பேர் மியான்மர் அனுப்பப்படுவர்” என்று அவர் கூறினார்.

“அதனால், ஒவ்வொரு நாளும் 300 பேரை அனுப்பி வைத்து தொடங்குவதாகவும், 3 மாதங்களுக்கு பிறகு மீளாய்வு மேற்கொண்டு, இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று சமரசம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். -BBC_Tamil