பியாங்யாங்கின் சமீபத்திய “வசீகர தாக்குதலுக்கு” உலக நாடுகள் கண்மூடித்தனமாக இருந்துவிட கூடாது என்று வட கொரியா பற்றிய சர்வதேச கூட்டம் ஒன்றில் ஜப்பான் தெரிவித்திருக்கிறது.
குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வட கொரியாவின் திட்டங்கள் பற்றி வட மற்றும் தென் கொரியா விவாதித்து வருகையில், கனடாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியபோது ஜப்பான் வெளியுறவு அமைச்சர் தாரோ கோனோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வட கொரியாவின் மீது அழுத்தங்களை அதிகரிக்க கனடாவின் வான்கூவர் நகரில் நடைபெற்ற 20 வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால், வட மற்றும் தென் கொரிய பேச்சுவார்த்தைகளுக்கும் இந்த நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
சர்வதேச தடைகள் அதிகரித்து வந்த நிலையிலும், கடந்த 2 ஆண்டுகளாக வட கொரியா தன்னுடைய அணு மற்றும் மரபு ரீதியான ஆயுத திட்டங்களை விரைவாக மேம்படுத்தி வந்துள்ளது.
நவம்பர் 28ம் தேதி வட கொரியா நடத்திய சமீபத்திய பேலிஸ்டிக் குண்டு சோதனை ஐக்கிய நாடுகள் மாமன்றம் அதன் மீது புதிய தடைகளை விதிக்க காரணமாகியது. அதன் பின்னர், பெட்ரோல் ஏற்றுமதிகள் மற்றும் சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்டது
ஆனால், தென் கொரியாவோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தான் தயாராக இருப்பதாக வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஜனவரி மாத தொடக்கத்தில் அறிவித்து, தென் கொரியாவின் பியியோங்சாங்கில் அடுத்த மாதம் நடைபெறுகின்ற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க பிரதிநிதி குழுவை அனுப்பப்போவதாகவும் அறிவித்தார்.
இதனை நடைமுறைப்படுத்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறாமல் இருந்த உயர்நிலை பேச்சுவார்த்தைகளை முதல்முறையாக வட மற்றும் தென் கொரியா நடத்தியுள்ளன.
வட மற்றும் தென் கொரியாவுக்கு இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் கொரிய தீபகற்பத்தில் நிலவி வந்த பதட்டத்தை தணிவுப்படுத்தியுள்ளன.
ஆனால், உலக நாடுகள் தங்களின் கண்காணிப்பை கைவிட கூடாது என்று கோனோ வலியுறுத்தியுள்ளார்.
“வட மற்றும் தென் கொரியா இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையை வட கொரியா ஊக்குவிப்பதால், தடைகளை தளர்த்தி அல்லது ஏதாவது உதவிகளை வழங்கி இந்த நடவடிக்கைக்கு சன்மானம் வழங்க வேண்டும் என்று பலரும் வாதிடுவது பற்றி எனக்கு புரிகிறது” என்று அவர் பேசியுள்ளார்.
“வெளிப்படையாக தெரிவிக்க வேண்டுமானால் இந்தப் பார்வை அப்பாவிதனமானது என்று எண்ணுகிறேன். தங்களுடைய அணு ஏவுகணை திட்டத்தை நிறைவேற்றுவதற்கு சற்றுநேரத்தை பெற்றுக்கொள்ள வட கொரிய விரும்புவதாக நான் நம்புகிறேன்” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
இவருடைய கருத்துக்களையே அமெரிக்கா எதிரெலித்திருக்கிறது.
“நம்பத்தகுந்த பேச்சுவார்த்தைக்கு வட கொரியா வரும்வரை அதன் மீது அழுத்தங்களை வழங்க வேண்டும்” என்று அமெரிக்க வெளியுறவு செயலர் ரெக்ஸ் தில்லர்சன் கூறியிருக்கிறார்.
வட கொரியா பேச்சுவார்த்தைக்கு உடன்படுவதற்கு சமீபத்தில் விதிக்கப்பட்ட தடைகளும், அழுத்தங்களும் காரணமாக இருந்துள்ளன என்று நம்புவதாக தென் கொரிய வெளியுறவு அமைச்சர் காங் கெயுங்-வஹா இந்த கூட்டத்தில் கூறியுள்ளார்.
“சர்வதேச சமூகத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகள் உண்மையிலேயே பயனளிக்க தொடங்கியுள்ளன” என்று அவர் கூறினார்.
“சட்டப்பூர்வமற்ற” கூட்டம்
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தீர்மானத்திற்கு தேவையானதற்கு மேலாகவே வட கொரியா மீது கடும் தடைகளை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்த 20 நாடுகள் கூட்டறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தை அமெரிக்காவும், கனடாவும் இணைந்து நடத்தியுள்ளன. வட கொரியாவின் முக்கிய கூட்டாளி நாடுகளான சீனாவும், ரஷ்யாவும் இதற்கு அழைக்கப்படவில்லை.
வட கொரியா அதனுடைய அணு ஆயுத இலக்குகளை நிறைவேற்றி கொள்வதை தடுத்து நிறுத்தவதற்கு போதுமான அழுத்தங்களை வழங்கவில்லை என்று இந்த 2 நாடுகளும் குற்றஞ்சாட்டப்படுகின்றன.
இந்த கூட்டம் “சட்டப்பூர்வமற்றது” என்று கூறி சீனா நிராகரித்துள்ளது.
இந்த கூட்டத்தில் கொரிய தீபகற்பத்தோடு தொடர்புடைய மிகவும் முக்கிய தரப்புகள் கலந்துகொள்ளவில்லை. எனவே, இந்த கூட்டம் சட்டப்பூர்வமானது அல்லது சரியான பிரதிநித்துவம் பெற்றது அல்ல” என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லு காங் தெரிவித்துள்ளார். -BBC_Tamil