தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தென்னிலங்கையிடம் சோரம் போகவில்லை: செல்வம் அடைக்கலநாதன்

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தென்னிலங்கையிடம் சோரம் போகவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளைப் போன்று இராஜதந்திரத்தைக் கடைப்பிடிக்கின்றது’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “கிராமிய மற்றும் நகர அபிவிருத்திக்கான தேர்தல் என்பதைக் கடந்து சில அரசியல் ரீதியான முரண்பாடான கருத்துக்களை இந்த தேர்தலில் பலர் முன்வைத்து வருவதைக் காணக் கூடியதாக இருக்கிறது. அந்தவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு விடயங்களில் அரசுக்கு ஆதரவாக செயற்படுவதான குற்றச்சாட்டை இன்று பலர் முன்வைத்து வருகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் வடக்கு – கிழக்கு பிரதேசத்தையும் சிதைப்பதற்கான வேலைகள் தென்னிலங்கையில் நடைபெறுகின்றது. இன்று பொது எதிரியாக எல்லோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே கருதி வருகின்றனர்.

கூட்டமைப்பை பலவீனப்படுத்தி சர்வதேச அழுத்தத்துடன் வருகின்ற அரசியல் தீர்வு என்ற விடயத்தை பலவீனப்படுத்தும் வகையில் கூட்டமைப்பு மீது பழிகள் சுமத்தப்படுகின்றன. எங்களுடைய இனப்பிரச்சனைக்கான நிரந்தர தீர்வை புதிய அரசியலமைப்பு ஊடாக பெறவேண்டும் என்ற நோக்கில் நாம் செயற்படுகின்றோம்.

உலகத்தையே விஞ்சுகின்ற வகையில் எமது ஆயுதப் போராட்டம் இடம்பெற்ற காலத்திலும் கூட விடுதலைப் புலிகள் தங்களது இராஜதந்திர நகர்வுகளை பல வழிகளிலும் மேற்கொண்டார்கள். அதேபோல் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் தமது கடமைகளைச் செய்கிறது. அதை இங்கிருக்கின்ற பல கட்சிகள் ‘இவர்கள் சோரம் போய்விட்டார்கள். இவர்கள் அரசாங்கத்டதுடன் சேர்ந்து போய் விட்டார்கள்’ என்று அவப்பெயரை ஏற்படுத்துகிறார்கள்.

புதிய அரசியலமைப்பு மாற்றம் பெறுகின்ற சந்தர்ப்பத்தை நாங்கள் ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும். சர்வதேச சமூகம் எப்படி எங்களது ஆயுதப் போராட்டத்தை மௌனிக்கச் செய்ததோ, எப்படி கொடுங்கோல் ஆட்சியை மாற்றியதோ அதைப் போல் இந்த சர்வதேச சமூகத்திடம் நியாயம் கேட்கும் வகையில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காய்களை நகர்த்துகிறதே தவிர, ஐக்கிய தேசியக் கட்சியிடமோ, ஜனாதிபதியிடமோ சோரம் போகவில்லை. போராட்டத்திலும் சரி, அரசியலிலும் சரி சில இராஜதந்திரங்களுடன் உருவாக்கப்பட்ட மற்றும் செயற்பட்ட வரலாறுகளை நாம் பார்க்க வேண்டும்.” என்றுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: