அமெரிக்க தேசிய பாதுகாப்பின் முக்கிய கவனம் இனி பயங்கரவாதம் அல்ல, உலகின் சக்தி மிக்க நாடுகள் இடையில் நிலவும் போட்டியே என்று அமெரிக்க பாதுகாப்பு செயலர் (பாதுகாப்பு அமைச்சர்) ஜேம்ஸ் மேத்தீஸ் தெரிவித்திருக்கிறார்.
“சீனா மற்றும் ரஷ்யா போன்ற முற்றிலும் மாறுபட்ட திருத்தல்வாத சக்திகளிடமிருந்து அமெரிக்கா அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது”, என்று தேசிய பாதுகாப்பு திட்டத்தை வெளியிட்டபோது அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா ஜனநாயகத்தில் சோதனை முயற்சிகளுக்கு அச்சுறுத்தலாக அமைவதாக, ரஷ்யாவைப் பற்றி சூசகமாகக் குறிப்பிட்ட அவர்
“எங்களுக்கு சவால்விட்டால், அதுவே நீண்ட மற்றும் மோசமான நாளாக அமையும்” என்று எச்சரித்தார்.
2016 ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் பரப்புரைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் கூட்டு சதி இருந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு புலனாய்வு செய்யப்பட்டு வருவது அமெரிக்காவில் பிரச்சினையாகியுள்ளது.
பால்டிமோரிலுள்ள ஜான் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பேசியபோது, நாடாளுமன்றம் அமெரிக்க ராணுவத்திற்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அமெரிக்க மத்திய பட்ஜெட்டில், “கண்மூடித்தனமான மற்றும் தானாகவே நிதி குறைக்கப்படுவது இல்லாமல் பார்த்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். -BBC_Tamil