பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக நீக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் நேற்று நடந்த ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான 21 ஆவது கூட்டுக் குழுக் கூட்டத்திலேயே, இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கும், அனைத்துலக தரநியமங்களுக்கு ஏற்ற புதிய சட்டத்தை கொண்டு வருவதற்கும் அவசர நடவடிக்கையை சிறிலங்கா அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள எஞ்சிய கைதிகளின் பிரச்சினையை கூடிய விரைவில் தீர்ப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு முயற்சிகள் மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும் சிறிலங்கா அரசாங்கம் இந்தக் கூட்டத்தில் விளக்கமளித்துள்ளது.
-puthinappalakai.net