பாதுகாப்பு பலூன், ஆசனப்பட்டி இல்லாத வாகனங்களுக்கு தடை!

பயணிகள் மற்றும் சாரதிகளின் பாதுகாப்புக்கான அம்சமாக காணப்படும் ஆசனபட்டி மற்றும் பாதுகாப்பு பலூன் இன்றிய வாகனங்களை இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் 01ஆம் திகதி முதல் குறித்த தடை அமுலுக்கு வருவதாக நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்ட குறித்த யோசனை, ஜனவரி 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தவிருந்த நிலையில், வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க அந்த யோசனை பிற்போடப்பட்டது.

அதற்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் 01ஆம் திகதியின் பின்னர் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களில், சாரதி மற்றும் முன் ஆசனத்தில் பயணிப்பவருக்கான பாதுகாப்பு பலூன், பூட்டுவதை தடுக்கும் பிறேக் தொகுதி (Anti-locking Breaking System (ABS)) மற்றும் முற்புற, பிற்புற ஆசனங்களில் பயணிப்போருக்கான மூன்று இடங்களில் இணைக்கப்படும் ஆசன பட்டி (Three Point Seat Belt) காணப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்புகளை மீறுகின்ற வாகனங்கள் மற்றும் அவை தொடர்பான தகவல்கள், உரிய நிறுவனங்களால் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-4tamilmedia.com

TAGS: