உரிய மதிப்பு தராவிடின் ஆட்சியை மாற்றுவோம்; எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவிப்பு

“நாம் தற்போது நிதானமாக, நியாயமாக, நேர்மையாக ஒருமித்த நாட்டுக்குள் மதிப்பைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றோம். அது நடைபெறாவிட்டால் எமது சம்மதம் இல்லாமல் நடைபெறும் ஆட்சியை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார்.

திருகோணமலை நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் உள்ளூராட்சி சபைத்  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று நடத்தப்பட்ட மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் ஒருமித்து நிற்கின்றார்களா என்பதை சர்வதேச ரீதியில் இந்தத்  தேர்தலை பலர் உற்று நோக்குகின்றனர்.  தமிழ் மக்கள் மிக நீண்ட காலமாகப் போராடி வருகின்றார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படை பிரகடனத்தின்படி ஒரு மக்களை அவர்களின் சம்மதம் இல்லாமல் ஆட்சிபுரிய முடியாது. எமக்கு சுயாட்சி உரித்து உண்டு. அந்த உரிமை மதிக்கப்பட வேண்டும்.

நாம் தற்போது நிதானமாக, நியாயமாக, நேர்மையாக ஒருமித்த நாட்டுக்குள் நியாயமான மதிப்பைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றோம். அது நடைபெறாவிட்டால் எமது சம்மதம் இல்லாமல் நடைபெறும் ஆட்சியை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும்.

நாங்கள் இன்று அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றோம் என்றும், மக்களுடைய பல கருமங்களை தீவிரமாகக் கையாளவில்லை என்றும் எம்மீது குற்றம்சாட்ட சிலர் முயற்சிக்கிறார்கள். அது தவறு.  நாங்கள் அரசின் பங்காளிகள் அல்லர். நாங்கள் அரசின் அமைச்சர்களும் அல்லர்.

எமது பிரச்சினை தீரும்வரை அமைச்சர்களாக வரமாட்டோம். எமது மக்கள் தமது உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அவர்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் அவர்களுடைய கருமங்களை அவர்களே கையாளக்கூடிய நிலை ஏற்படும் வரை நாம் அமைச்சுப் பதவிகளை ஏற்கமாட்டோம்.

நாட்டில் ஒரு கொடூரமான ஆட்சி நடைபெற்றது. அதை எமது மக்களின் வாக்குப் பலத்தால் நாம் மாற்றினோம் அதன் நிமித்தம் எமது மக்களின் காணிப் பிரச்சினை காணாமல்போனோர் பிரச்சினை தொடர்பான விடயங்களுக்குத் தீர்வு பெற்று வருகின்றோம்” – என்றார்.

-tamilcnn.lk
TAGS: