எம்மைச் சுற்றி இராணுவம்! அச்சத்துடன் வாழ்கின்றோம்!! – கேப்பாப்பிலவுக் காணிகளில் குடியமர்ந்த பெண்கள் கவலை

“எமக்குக் குடிதண்ணீர் வசதியோ மின்சார வசதியோ இல்லை. மலசலகூட வசதிகளும் செய்து தரப்படவில்லை. எம்மைச் சுற்றியும் இராணுவம் இருக்கின்றது. குடிதண்ணீர் எடுப்பதுக்கு இராணுவ நிலைகளைக் கடந்தே செல்ல வேண்டும். அச்சமாக இருக்கின்றது. அதிகாரிகள் எவரும் எம்மை வந்து பார்க்கவில்லை.”

– இவ்வாறு தெரிவித்தனர் கேப்பாப்பிலவில் விடுவிக்கப்பட்ட காணிகளில் மீளக்குடியமர்ந்த மக்கள்.

இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறியதாவது:-

“கேப்பாப்பிலவில் விடுவிக்கப்பட்ட111 ஏக்கர் காணிகளில் நாங்கள் மீளக்குடியமர்ந்தோம். எமது வீடுகளை சுத்தம் செய்து, கழுவி வீடுகளில் இருக்கிறோம். நாங்கள் குடியமர்ந்து 15 நாட்களாகியும் அதிகாரிகள் வந்து எம்மைப் பார்க்கவில்லை. எப்படி இருக்கின்றோம், என்ன தேவை என்று அறிந்துகொள்ளவும் இல்லை.

இங்கு தண்ணீர் வசதியின்றி நாம் துன்பப்படுகின்றோம். கிணறுகள் துப்புரவு செய்யப்படவில்லை. மலசலகூடங்கள் யாவும் மூடப்பட்ட நிலையிலே உள்ளன.

ஐந்து வருடங்கள் சென்றாலும் எமது காணிகளைப் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. காணிகள் முழுவதும் கட்டட இடிபாடுகளும், சல்லிக்கற்களுமாகவே காணப்படுகின்றன. மின்வசதியும் இல்லை.

எமக்கு முன்பக்கமும், பின்பக்கமும் இராணுவத்தினர் இருக்கின்றனர். வெளிச்சம் இல்லாததால் மிகவும் அச்சமாக இருக்கிறது.

குறிப்பாக உறவுகள், அயலவர்கள் கூடியிருந்தமையால் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் அச்சமின்றி வாழ்ந்தன. ஆனால், இப்போது அயலவர்களின் காணிகள் விடுவிக்கப்படாமையால் அவர்கள் கடும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

நாங்கள் எமது உறவுகளோடு 318 நாட்களாக  எமது பூர்வீக மண்ணை விடுவிக்கப் போராடினோம். எனினும், எமது உறவுகளின் காணிகள் விடுவிக்கப்படவில்லை. அவர்கள்

தொடர்ந்தும் வீதியில் இருந்து போராடி வருகின்றனர். கட்டம் கட்டமாக காணிகளை விடுவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 111 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டது போன்று எமது உறவுகளின் காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் வெகுவிரைவில் எம்முடன் இணையவேண்டும்” – என்றனர்.

-tamilcnn.lk

TAGS: