“வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அழுத்தங்களை பிரயோகித்த இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் அதற்கான அதிகாரங்களை வழங்கும் விடயத்தில் மௌனமாக இருப்பதானது, வடக்கு மாகாண சபையை திட்டமிட்டு புறக்கணித்து முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்கான உந்துதலை இலங்கை அரசாங்கத்திற்கு கொடுத்துள்ளது. ” என்று வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அவரது அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அனந்தி சசிதரன் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 26, 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் நடைபெற ஏற்பாடாகியுள்ள 9வது சர்வதேச வர்த்தக கண்காட்சி நிகழ்வும் வடக்கு மாகாண சபையை முற்றிலுமாக புறக்கணித்து நடாத்தப்படவிருக்கின்றது. இந்நிகழ்விற்கான முன்னேற்பாடுகள் ஏறக்குறைய நிறைவடையும் இத்தருணம் வரை வடக்கு மாகாண சபையின் வர்த்தகமும் வாணிபமும் அமைச்சராக இருக்கும் எனக்கு எதுவித அறிவிப்போ, அழைப்போ கிடைக்கவில்லை.
மக்களால் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட மாகாண சபை நிர்வாகத்தை வேண்டுமென்றே புறக்கணித்து மத்திய அரசின் நிர்வாக கட்டமைப்புகளினூடாக வடக்கில் பொது நிகழ்வுகளையும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதானது இலங்கை அரசின் திட்டமிட்ட சதியாகும். இதற்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் துணைபோவது வேதனையளிக்கின்றது.
வடக்கில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அழுத்தங்களை பிரயோகித்த இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் அதற்கான அதிகாரங்களை வழங்கும் விடயத்தில் மௌனமாக இருப்பதானது, இவ்வாறு வடக்கு மாகாண சபையை திட்டமிட்டு புறக்கணித்து முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்கான உந்துதலை இலங்கை அரசாங்கத்திற்கு கொடுத்துள்ளது.
இவ்விடயத்தில் இந்தியாவும் மௌனமாக இருந்து வருவது தமிழர்களாகிய எமக்கு பெரும் ஏமாற்றத்தினையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னைய இந்திய இலங்கை அரச தலைவர்களால் ஏற்படுத்தப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் வடக்கு-கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் ஏற்று அங்கீகரிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவின் சிறந்த நட்பு நாடாக இலங்கையை சீராட்டி பாராட்டி வந்த நிலையிலும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு வேட்டுவைக்கும் வகையில் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தனித்தனி நிர்வாக அலகுகளாக பிரிக்கப்பட்டது. தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் இந்த நடவடிக்கையை கண்டிக்கவோ தடுத்து நிறுத்தவோ அப்போதைய இந்திய அரசோ தொடர்ந்து வந்த அரசுகளோ ஆக்கபூர்வமான முயற்சிகளை எடுத்திருக்கவில்லை என்பது பெரும் குறையாகவே இன்றுவரை நீடித்து வருகின்றது.
தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தை மக்களின் ஆதரவுடன் விடுதலைப் புலிகள் முன்னெடுத்து வந்த போது மக்களிடம் இருந்து புலிகளை அந்நியப்படுத்தி பலவீனப்படுத்துவதற்கு மேற்கொண்ட சதித்திட்டத்தின் நீட்சியாகவே தற்போதைய மாகாண சபையை புறக்கணிக்கும் அரசின் செயற்பாடுகளும் அமைந்துள்ளது.
மக்களால் ஜனநாயக வழியில் தெரிவுசெய்யப்பட்ட வடக்கு மாகாண சபையின் நிர்வாக எல்லைக்குள்ளாக நடைபெறும் முன்னெடுப்புகளில் வடக்கு மாகாண சபையை புறந்தள்ளும் இலங்கை அரசின் இச்சதியில் இந்திய அரசும் மௌனமாக பங்கேற்பதானது, அதிகாரப் பரவலாக்கத்தை மேற்கொண்டு தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்று வலியுறுத்திவருதன் மீதான ஐயப்பாட்டினை தமிழர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச வர்த்தக கண்காட்சிக்கு இந்திய அரசின் ஒத்துழைப்பும் ஆதரவும் மேலோங்கியிருக்கும் நிலையில் குறித்த நிகழ்விற்கு வடக்கு மாகாண சபை முதலமைச்சர் மற்றும் துறைசார் அமைச்சர் உள்ளிட்டவர்களின் பங்கேற்புடன் நடாத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கூறக்கூடிய இடத்தில் இருந்தும் அதனை செய்யாதது உண்மையில் எமது மக்களுக்கு பெரும் வேதனையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.” என்றுள்ளார்.
-4tamilmedia.com