தென்கொரியாவின் தென்கிழக்கு பகுதியிலுள்ள மிர்யங் என்ற இடத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 39 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலும் வயோதிகர்களுக்கு சிகிச்சையளிக்கும் சேஜாங் என்ற மருத்துவமனையின் அவரச சிகிச்சை பிரிவில் தீப்பற்ற தொடங்கி மற்ற இடங்களுக்கும் பரவ தொடங்கியதாக நம்பப்படுகிறது.
அந்த நேரத்தில் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனை கட்டடத்திற்குள்ளும் அருகிலுள்ள மற்றொரு மருத்துவமனையிலும் இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அதில் 11 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த மருத்துவமனையில் இருந்து 93 நோயாளிகள் மீட்கப்பட்டுள்ளார்.
தீ அவசர அறையிலிருந்து பற்ற தொடங்கியிருக்கலாம் என்று கருதுவதாக தீயணைப்புத் துறையின் தலைவரான சோய் மேன்-வூ கூறியுள்ளார்.
தீ விபத்திற்கான காரணம் குறித்து இன்னும் அறியப்படவில்லை என்று அவர் கூறினார்.
“பாதிக்கப்பட்டவர்கள் சேஜாங் மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள மருத்துவமனையையும் சேர்ந்தவர்களாவர். அதில் சிலர் மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர்” என்று அந்த அதிகாரி கூறியதாக ஏஎஃப்பி செய்தி முகமையின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. -BBC_Tamil