“கடந்த 10 வருடங்களில், இலங்கை பெற்றுக்கொண்ட கடன்களின் மொத்தத் தொகை, 10 ட்ரில்லியன் (10 இலட்சம் கோடி) ரூபாயாகும். இந்தத் தொகையில், 1 ட்ரில்லியன் ரூபாய் செலவுக்கான கணக்குகள் மாத்திரமே காணப்படுகின்றன. ஏனைய 9 ட்ரில்லியன் ரூபாய்க்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை” என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார்.
ஊடக நிறுவனங்களின் பிரதானிகள், பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஆசிரியர்களுடன், கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (26) காலை நடைபெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய ஜனாதிபதி கூறியதாவது,
“நாட்டின் கடன்தொகை குறித்து மக்களுக்கு வெளிப்படுத்துவது கட்டாயமாகும். மேற்கூறப்பட்ட 10 வருடங்களில், எனது ஆட்சியின் மூன்று வருடங்களும் உள்ளடங்குகின்றது. நாட்டின் அபிவிருத்திக்காக வெளிநாடுகளிலிருந்து பெற்ற கடனை, பலர் துஷ்பிரயோகப்படுத்தி உள்ளனர்.
“நிதி மோசடி செய்யப்பட்டதைப் பார்த்துக்கொண்டிருக்க என்னால் முடியாது. என்னுடைய எதிர்காலம் பற்றி எனக்குக் கவலையில்லை. பிணைமுறி விவகாரத்தில், ரவி என்னைப் பழிசொல்கிறார். எவ்வாறாயினும், இந்த விடயத்தில் என்னுடைய முழு அர்ப்பனிப்பையும் நல்குவேன். இவ்வான விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் அதிகாரிகளை பலப்படுத்துவேன். எவ்வாறாயினும், நிதி மோசடிகள் குறித்த விசாரணைகளை உடனே முடித்துவிட முடியாது.
“வெளிநாடுகளிலிருந்து தரக்குறைவான தேயிலை இறக்குமதி செய்யப்பட்டு, இலங்கைத் தேயிலை என ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதேபோல், மிளகாய், அன்னாசி போன்றவையும் இறக்குமதி செய்யப்பட்டு, இலங்கை உற்பத்திகளென ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால் தான் உள்ளூர் உற்பத்திகளுக்கு வெளிநாடுகளில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.
“போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை, இளைய சமுதாயத்தைப் பயமுறுத்தி போராட்டத்தில் ஈடுபடவைக்கின்றமை, இளம் பிக்குமார் நடந்துகொள்ளும் விதங்களைப் பார்த்தால் வேதனையாக இருக்கின்றது” என்றார்.
-tamilmirror.lk