கூட்டமைப்பை உடைக்க முற்படுபவர்களை கருணா அம்மான் போல் பார்கிறேன் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரும், ரெலோ கட்சியின் உறுப்பினருமான செந்தில் நாதன் மயூரன் தெரிவித்தார். வவுனியா சாஸ்திரிகூளாங்குளத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பரப்புரைகூட்டம் நேற்று (26.01) கூட்டமைப்பு வேட்பாளர் மருத்துவர் பத்மநாதன் சத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது. இப் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
எங்களை விட்டு பிரிந்து சென்றவர்கள் எதற்கு எடுத்தாலும் இரண்டு கோடி, இரண்டு கோடி அவர்களுக்கு நித்திரையிலும் கூட இரண்டு கோடி ஞாபகம் தான் வரும் போல இருக்கின்றது. எனக்கே சில வேளைகளில் பல சந்தேகங்கள் எழுகின்றது. ஏனென்று சொன்னால் அவர்கள் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்று கேட்பதைவிட இரண்டு கோடிக்கு வாக்களியுங்கள் என்று கேட்டு விடுகின்றார்களோ என்று எனக்கு கேட்கின்றது. அப்படியாக அவர்கள் ஒரு பொய்யானதொரு பரப்புரையை செய்து கொண்டிருகின்றார்கள்.
பாராளுமன்ற உறுப்பினராக தமிழ்தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்காக 2015ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலே தமிழ்தேசிய கூட்டமைப்பின் வீட்டு சின்னத்திலே போட்டியிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அன்று உரிமைக்காக, உணர்விற்காக, தமிழ்தேசியத்திற்காக, தமிழ்தேசியத்தினுடைய விடிவிற்காக அனைவரும் அணிதிரண்டு தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களியுங்கள் என்று கூறியவர்கள் இன்று என்னவொரு முரண்பாடு காரணமாக சில்லறைத்தனமான, சின்னாபின்னமான எண்ணங்களோடு இன்று தமிழ்தேசிய விடுதலை கூட்டமைப்பு என்று சொல்கின்ற நிலைக்கு அவர்கள் மாறியிருக்கின்றார்கள்.
அவர்களை நீங்கள் புரிய வேண்டும். அவர்களின் சிந்தனைகளை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். அவர்களா தமிழ் மக்களினுடைய எதிர்பார்ப்பை தமிழ் மக்களினுடைய அபிவிருத்தியை, தமிழ் மக்களினுடைய உரிமைக்காக குரல் கொடுக்க போகின்றார்கள் என்பதை நீங்கள் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
கடந்த பாராளுமன்ற தேர்தலிலே தமிழ் தேசிய கூட்டமைப்பிற்காக அவர்களுக்கு இட்ட வாக்காளர்கள் இன்று அவமானத்தோடு திரிகின்ற நிலைக்கு அவர்கள் ஆளாகியிருக்கின்றார்கள். தமிழ்தேசிய கூட்டமைப்பு என்ற ரீதியில் தான் அவர்களுக்கு வாக்குகளை அளித்திருந்தோம். அந்த வகையில் அவர்கள் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக வாக்கு பிரச்சாரத்தில் ஈடுபடுவதையிட்டு நாங்கள் வெட்கப்படுகின்றோம் என்று சொல்கின்ற தலைகுனிகின்ற நிலைக்கு ஆளாகியிருகின்றார்கள். உங்களை பார்க்கின்ற பொழுது நீங்கள் சிங்கள சக்திகளுக்கு விலை போய் விட்டீர்களா என்ற எண்ணங்கள் எங்களுக்குள்ளேயே உருவாகின்றது.
உங்களை கருணாம்மானுக்கு ஒப்பிட்டு பார்க்கின்றோம். தமிழீழ விடுதலை புலிகள் பயங்கர வாதிகள் என்று சொன்ன அந்த சிங்கள சக்திகளோடு நீங்கள் இணைந்திருகின்றீர்களா என்ற கேள்வியும் ஐயப்பாடும் எங்களுக்குள்ளேயே இருக்கிறது. கடந்த போராட்டங்களிலே நாங்கள் மிகவும் அவதானமாக மிக நிதானமாக ஆயுத பலங்களோடு நிற்கின்ற போது எங்களை தலை குனிய வைக்கின்ற நிலையாக பிரிந்து சென்ற கருணாம்மான் எவ்வாறானதொரு படு துரோக செயலை செய்தாரோ இன்று ஐயா சம்பந்தன் ஐயாவினூடாக நாங்கள் எங்களினுடைய மக்களினுடைய உரிமைக்காக நிதானமாக சென்றிருகின்ற பொழுது இன்று அதனை குழப்புகின்ற வகையிலே பிரிந்து சென்றிருப்பதனை பார்கின்ற பொழுது கருணாம்மானுக்கும் ஈழமக்கள் புரட்சிகர முன்னணிக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதனை நான் உங்களை பார்த்து கேட்கின்றேன்.
அவர்களை துரோகிகள் என்ற ரீதியிலே அவர்களை நாங்கள் பட்டியலிட வேண்டும். அதே நேரம் இவர்கள் யாரோடு கூட்டு சேர்ந்திருகின்றார்கள். தமிழர் விடுதலை கூட்டணி, ஈழமக்கள் புரட்சிகர முன்னணி அவர்களுடைய கடந்த கால வரலாற்றை நாங்கள் பார்க்க வேண்டும். தமிழர் விடுதலை கூட்டணியினுடைய தலைவர் ஐயா ஆனந்தரி சங்கரி ஐயா 2013ம் ஆண்டு எங்களோடு மாகாண சபை தேர்தலிலே போட்டியிட்டு தமது சொந்த மாவட்டத்திலே படு தோல்வியை தழுவிக்கொண்டவர்.
2015ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலே ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் பாராளுமன்ற தேர்தலிலே படுதோல்வியை தழுவிக்கொண்டவர்கள் தோல்விக்கு தோல்வி சரியென்று இன்று புதிதான கூட்டை ஆரம்பித்திருகின்றார்கள். நாங்கள் சற்று நிதானமாக செயற்பட வேண்டிய கட்டாயத்திலே இருக்கின்றோம்.
இன்று பல கட்சிகள் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குள்ளேயே இருக்கின்றோம். ஆனால் எங்களுக்குள்ளேயே பல கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் தமிழ் மக்களினுடைய எதிர் பாற்பிற்காக, உரிமைக்காக, எதிர்காலத்திற்காக, எதிர்கால சந்ததியினரின் வளர்ச்சிக்காக நாங்கள் ஒற்றுமையாக பயணிகின்றோம். இந்த தேர்தலிலே நீங்கள் இடுகின்ற ஒவ்வொரு வாக்குகளும் இனி இந்த முறை எங்களை விட்டு பிரிந்து சென்றவர்களுக்கு செருப்படியாக இருக்க வேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு நீங்கள் சென்றால் இனி எந்தவொரு கட்சிகளுக்கும் அரசியல் எதிர்காலமே இல்லை என்பதை நிரூபிப்பதற்குரிய தேர்தலாக இருக்க வேண்டும். இனி யாரும் தமிழ்தேசிய கூட்டமைப்பு அண்ணன் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைக்க வேண்டும் என்று யார் நினைத்தாலும் அவர்களுடைய மனங்கள் உடைந்து விட கூடாதென்ற வகையிலே அவர்களுடைய எண்ணங்களும், சிந்தனைகளும் தமிழ்தேசிய கூட்டமைப்பை பிளவு படுத்தாத பிரிக்காத வகையிலே மாறுகின்ற வகையிலே உங்களுடைய வாக்குகளை உங்களுக்காக உங்களுடைய கைகளிலே பல பீரங்கிகளே தேவையில்லை.
நாங்கள் உங்களுடைய கைகளிலே இருகின்ற வாக்கு பலத்தை நீங்கள் சரியாக பயன்படுத்துகின்ற பொழுது நாங்கள் என்னும் தமிழ்தேசிய கூட்டமைப்பினை தமிழ் மக்களினுடைய விடிவிற்காக ஒரு ஜனநாயக வழியிலே போராடுகின்ற தமிழ் மக்களினுடைய பிரதிநிதிகளாக தமிழ்தேசிய கூட்டமைப்பை ஏற்றுகொள்கின்றோம் என்று சிங்கள வல்லாதிக்கத்திற்கு பறைசாற்றுகின்ற வகையிலே உங்களுடைய வாக்கு பலத்தை சரியான முறையிலே பயன்படுத்த வேண்டும்.
எங்களை பொறுத்த வரையிலே எங்களுக்கு எதிரிகள் அதிகம் இருகின்றார்கள். ஆனால் அதைவிட எங்களைவிட்டு பிரிந்து சென்ற துரோகிகள் அதிகம் இருகின்றார்கள். சொல்லப்போனால் வடக்கு மாகாண சபையிலே கெளரவ முதலமைச்சர் தமிழ்தேசிய கூட்டமைப்பினுடைய முதலமைச்சர் இன்று தமிழ்தேசிய கூட்டமைப்பை விமர்சிக்கின்றளவிலே இருக்கின்றார். ஆனால் தமிழ் மக்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பு தான் தமிழ் மக்களினுடைய அரசியல் ரீதியான முன்னெடுப்பிற்கு பயந்து அவர்கள் சரியான முறையில் செயற்படுகின்றார்கள் என்பதை நிரூபிப்பதற்காக அவருக்கு வாக்களித்தார்கள். ஆனால் இன்று அவர் எதிராக செயற்படுகின்றார்கள்.
இன்று துரோகிகள் அதிகமாகி கொண்டிருகின்றது. நாங்கள் நிதானமாக செயற்படுகின்றோம். எத்தனை துரோகிகள் எங்களோடு இருந்தாலும் நாங்கள் தமிழ் மக்களினுடைய விடிவிற்காக தொடர்ந்து போராடுவோம். தொடர்ந்து பயணிப்போம் அதில் என்ற மாற்று கருத்துக்கும் இடமில்லை. இங்கே உறங்கி கொண்டிருகின்ற வீர மறவர்களுடைய கனவுகள் நனவாக வேண்டும் என்றால் நீங்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு நீங்கள் உங்கள் வாக்குகளை இட வேண்டும் எனத் தெரிவித்தார்.
-tamilcnn.lk