பாலத்தீனர்களும் யூதர்களும் இந்தியாவிடம் அதிக அன்பு காட்டுவது ஏன்?

உங்களை இருவர் காதலித்தால் நீங்கள் யாரை, எதன் அடிப்படையில் தேர்ந்தெடுப்பீர்கள்? இதே போன்ற தர்மசங்கடமான நிலையைதான் பிரதமர் நரேந்திர மோதியும், இந்திய வெளியுறவுக் கொள்கைகளை வகுப்பவர்களும் எதிர்கொண்டுள்ளார்கள்.

அண்மைக் காலமாக இஸ்ரேலிலும் இந்த கேள்வி எழுப்பப்படுகிறது. அங்கு பத்து நாட்கள் பயணம் மேற்கொண்டபோது பாலத்தீனர்கள் இந்தியாவை விரும்புவது போலவே யூதர்களும் விரும்புகிறார்கள் என்பதை தெரிந்துக் கொண்டேன்.

நானும் எனது நண்பர் தீபக் ஜஸ்ரோடியாவும் இந்தியர்கள் என்பது தெரிந்துவிட்டால், அங்குள்ளவர்களின் முகத்தில் புன்னகை பூக்கும். எங்களிடம் அன்புடன் பேசுவார்கள், நட்பு கொள்வார்கள்.

அதிலும் என்னால் வித்தியாசத்தைப் பார்க்க முடிந்தது. அன்பில் என்ன வித்தியாசம் என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன். ஒரு ஆரம்பப் பள்ளிக்கு சென்றிருந்தபோது அங்கிருந்த பத்து வயதுக்கும் குறைவான மாணவர்களை சந்தித்தோம்.

நாங்கள் இந்தியாவில் இருந்து வந்தோம் என்று தெரிந்ததும், ஒரு பெண் ஷாருக்கான் என்று சொன்னார். மற்றொரு சிறுவன் சில பாலிவுட் திரைப்படங்களின் பெயரைச் சொல்லத் தொடங்கினான். அந்தக் குழந்தைகள் அனைவரும் பாலத்தீனியர்கள்.

ஜெருசலேமில் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் ஒரு யூதருடையது. ஆனால் அங்கு பணிபுரிந்தவர்களில் பாலத்தீனர்களும் இருந்தார்கள். இந்தியாவைப் பற்றிய பேச்சு வந்தபோது, இந்தியாவுக்கு வந்திருக்கிறீர்களா என்று ஹோட்டல் மேலாளரிடம் கேட்டேன். பல முறை வந்திருக்கிறேன் என்று சொன்ன அவர், தாஜ்மஹல், மணாலி, கோவா என்று தான் சுற்றிப் பார்த்த இடங்களின் பட்டியலை அவர் வாசித்தார்.

நான் சந்தித்த மற்றொரு பாலத்தீனர் பாலிவுட் பைத்தியம் என்றே சொல்லலாம். ராஜ்குமார் முதல் ரண்வீர் கபூர் வரை நடிகர்களைப் பற்றி விலாவாரியாக கேட்கிறார். அவர் ஹிந்தி திரைப்படப் பாடல்களின் ரசிகர் என்று கேட்டபோது வியப்படைந்தேன்!

பாலத்தீன அரபியர்களுக்கு இந்தியாவின் மீதான காதலுக்கு காரணம் பாலிவுட் என்று உணர்ந்தேன். இதுவே 50 வயதுக்கு மேலானவர்களை சந்தித்தால் அவர்கள் மகாத்மா காந்தியைப் பற்றி பேசினார்கள். தினமும் வன்முறைகளை எதிர்கொள்ளும் நகரத்தில் இருப்பவர்கள் அகிம்சாவாதியை அறிந்திருப்பதும் அவரைப் பற்றி எங்களிடம் பேசியதும் வியப்பளித்தது.

அங்குள்ள ஒரு பேராசிரியரிடம் எனது வியப்பு நிறைந்த வினாவிற்கான விடை கிடைத்தது. நோய் இருக்கும் இடத்தில் தானே மருந்துக்கு அதிக தேவை இருக்கும்? வன்முறை அதிகமாக இருக்கும் இஸ்ரேலுக்குத் தான் அகிம்சையின் முக்கியத்துவம் புரியும், அது காலத்தின் கட்டாயம் என்று சொன்னார் பேராசிரியர்.

சரி பாலத்தீனிய அரபியர்களைப் பற்றி சொல்லிவிட்டேன். இஸ்ரேல் யூதர்களுக்கும் இந்தியாவின் மீதான பிரேமையும், பிரியமும் அதிகமாகவே இருக்கிறது. நாங்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்று தெரிந்ததும், இரு கைகளையும் கூப்பி ‘நமஸ்தே’ என்று முகமண் கூறுகிறார்கள். இந்த வரவேற்பை பல இடங்களில் காண முடிந்தது.

பிரதமர் பெஞ்சமின் நெதான்யாஹு நமஸ்தே என்று சொல்வது மட்டுமே அவர்களின் வணக்கம் கூறும் முறைக்கு காரணம் இல்லை. இந்தியாவின் ஜனநாயகத்தை மதிக்கும் அவர்கள், இந்தியாவின் பன்முக கலாச்சரத்தை வரவேற்கிறார்கள். பல்வேறு இனங்களையும் மதங்களையும் சேர்ந்தவர்கள் ஒன்றாக இணக்கமாக வாழ்வது அவர்களை கவர்ந்திருக்கிறது.

நாங்கள் சந்தித்த ஒருவர் வித்தியாசமானவராக இருந்தார். கடந்த சில ஆண்டுகளாக அப்பாவி மக்களை துன்புறுத்தி வந்த அவர் தற்போது அதற்கு வருந்துகிறார்.

பல ஆண்டுகளாக தொழில்ரீதியாக இந்தியாவிற்கு அவ்வப்போது பயணம் மேற்கொள்ளும் யூத பெண் ஒருவர், இந்தியாவை மிகவும் நேசிப்பதாக சொல்கிறார். இந்தியாவில் எந்தக் குறையுமே இல்லை என்று அவர் கருதுகிறார்! இது எனக்கே கொஞ்சம் அதிகமாகத்தான் தெரிந்தது.

நம் நாட்டிலும் பல குறைகள் உள்ளன, ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன. ஏழை-பணக்காரர்கள் இடையிலான இடைவெளி விரிவடைவது, வன்முறை, பாலியல் பலாத்காரம், ஊழல், சாதி பிரச்சனை இப்படி பல சிக்கல்களை நாமும் எதிர்க்கொள்கிறோம்.

எந்தவொரு நாட்டையும் பூரணத்துவம் பெற்ற நாடு என்றோ, குறைகள் இல்லாத நாடு என்றோ சொல்ல முடியாது என்று சொன்னேன். ஆனால் இந்தியாவிலும் குறைகள் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ள அந்த யூதப் பெண் தயாராக இல்லை.

நான் சொல்லும் அனைத்திற்கும் அவரிடம் பதில் தயாராக இருந்தது. இந்தியா உன்னதமான நாடு என்ற தனது எண்ணத்தில் அவர் வலுவாகவே இருந்தார்.

மற்றொரு யூதப் பெண்ணை சந்தித்த சம்பவம் மேலும் வித்தியாசமானதாக இருந்த்து. அவர் மெத்த படித்த மேதாவி. இந்தியாவில் வசிக்கும் யூதர்களைப் பற்றி புத்தகம் எழுதியிருக்கும் அவர், இந்தியா-இஸ்ரேல் ராஜிய உறவுகளை வலுவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் இந்தியா வந்தபோது, அறிமுகம் இல்லாத நாட்டுக்கு வந்தது போல தோன்றவில்லை என்று அவர் சொன்னார். “இந்தியாவுக்கு வந்தபோது, என் சொந்த வீட்டுக்கு வந்தது போன்ற உணர்வே ஏற்பட்டது” என்கிறார் அவர். அதற்கு காரணம் என்ன? இந்தியாவைப் பற்றி அவ்வளவு படித்து தெரிந்து வைத்திருந்ததே அதன் காரணம்.

யூதர்கள் மற்றும் பாலத்தீனர்களின் உண்மையான அன்பும் பிரேமையும் இந்தியாவிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் சென்றிருந்தபோது அவர் பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை சந்திக்கவில்லை. பிரதமரின் இந்த முடிவு பாலத்தீனர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த்து.

மற்றொரு புறம், கடந்த மாதத்தில் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்த அமெரிக்காவின் முடிவுக்கு எதிரான ஐ.நா வாக்கெடுப்பில் இந்தியா பாலத்தீனர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தபோது, அவர்கள் அனைவரின் மார்பும் “56 அங்குலங்கள்” விரிந்தன.

ஆனால் இந்தியப் பிரதமரின் முடிவு இஸ்ரேலுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அங்குள்ள பத்திரிகைகள், இஸ்ரேலின் நம்பிக்கைக்குரிய நண்பனாக இந்தியா நடந்துக் கொள்ளவில்லை என்று எழுதின. ஆனால் அதுவும் தவறு என்று நிரூபணமானது.

1947-ல் உதயமான இந்தியாவுக்குப் பிறகு தோன்றியது இஸ்ரேல். இந்த இரண்டு இளம் நவீன நாடுகளின் வயதும் ஒன்றே பிரச்சனைகளும் ஒன்று போன்றதே.

விடுதலைக்கு பிறகு பல ஆண்டுகள் பாலத்தீனர்களிடம் ஆதரவாக இருந்தது இந்தியா. 1992இல் இஸ்ரேல்-இந்தியா இடையே ராஜிய ரீதியிலான உறவுகள் ஏற்பட்டபோது, இந்தியா தனது இரு அன்பர்களிடமும் ஒன்றுபோலவே நடந்துகொண்டு உறவுகளை சமநிலையில் பேணவே முயன்றது.

யூதர்கள் மற்றும் அரேபியர்களுடன் தனது அன்பான ஆதரவான போக்கைத் தொடர இந்தியா விரும்புகிறது. ஆனால், முதலில் தன்னலனை பேணுவதன் அடிப்படையிலே இந்தியாவின் அணுகுமுறை அமைந்திருப்பதை காணமுடிகிறது. இருப்பினும் இருதரப்பினரையும் நேசத்துடன் அணுகுவதே இந்தியாவின் விருப்பம்.

சென்ற ஆண்டு இஸ்ரேல் பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, இந்த ஆண்டு பாலத்தீனத்திற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பது இந்த கூற்றை நிரூபிக்கிறது. -BBC_Tamil