சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூட்டிய அவசர கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பங்கேற்கவில்லை.
விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மீதான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிப்பதற்காக, கட்சித் தலைவர்களின் அவசர கூட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று கூட்டியிருந்தார்.
இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கூட்டு எதிரணி, மற்றும் ஜேவிபி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டு எதிரணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் தம்மால் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என்று சிறிலங்கா அதிபர் செயலகத்துக்கு கடிதம் அனுப்பியிருந்ததாக கூறப்படுகிறது.
இரா.சம்பந்தன், கடந்த மூன்று நாட்களாக வன்னிப் பகுதியில் உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வருவதால்,அவர் சிறிலங்கா அதிபரின் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்தக் கூட்டத்தில், பிணைமுறி மோசடி குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையின் பக்கங்கள் காணாமல் போயிருப்பது தொடர்பாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய் என்று சிறிலங்கா அதிபர் விளக்கமளித்துள்ளார்.
அதேவேளை, ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் கையெழுத்திட்ட அறிக்கையின் மூலப் பிரதியை அதிபரின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ காண்பித்து, அதுவே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார் என்று, இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டியூ குணசேகர தெரிவித்தார்.
அத்துடன், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்படும் வரை, குற்றவாளிகளின் கைகளில் கிடைக்காமல் சில குறிப்பிட்ட தகவல்கள் இரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்று ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது என்றும் ஒஸ்ரின் பெர்னான்டோ கூறினார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய, ஆணைக்குழுவின் அறிக்கைகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளவாறு, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு தமது திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.
சுமார் ஒரு மணி நேரம் இந்தக் கூட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
-puthinappalakai.net