`11 ஆபத்தான நாடுகள்` – தடையை நீக்கிய அமெரிக்கா

பதினொரு நாடுகளை மிகவும் ஆபத்தான நாடுகள் என்று வரையறுத்து அந்நாடுகளிலிருந்து அகதிகள் தம் நாட்டிற்குள் நுழைய அமெரிக்கா தடை விதித்து இருந்தது. இந்த தடையை இப்போது நீக்கி உள்ளது அமெரிக்கா.

அதே நேரம், இந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வர விரும்புபவர்கள் புதிய பாதுகாப்பு சோதனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று ஓர் அமெரிக்க அதிகாரி தெரிவித்தார்.

வட கொரியா மற்றும் 10 இஸ்லாமிய தேசங்களிலிருந்து அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய கடந்த வருடம் அக்டோபர் மாதம் தடை விதித்தது டிரம்ப் நிர்வாகம்.

இப்போது அந்நாடு இந்த தடையை ஓரளவுக்கு நீக்கி உள்ளது.

இது குறித்து பேசிய அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கிரிஸ்ட்ஜென் நீல்சன், அவர்கள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றார்.

மேலும் அவர், எங்களுக்கு எங்கள் நாட்டிற்குள் யார் நுழைகிறார்கள் என்பதை அறிந்துக் கொள்வது மிக முக்கியமான ஒன்று என்றார்.

தடை விதிக்கப்பட்ட நாடுகள்

தடை விதிக்கப்பட்ட நாடுகள் – எகிப்து, இரான், இராக், லிப்யா, மாலி வடகொரியா, சோமாலியா, தெற்கு சூடான், சூடான், சிரியா மற்றும் ஏமன் என்கின்றன அகதிக் குழுக்கள்.

கடந்த மூன்று ஆண்டுகளாக, அமெரிக்காவுக்குள் நுழையும் அகதிகளில் 40 சதவிகிதத்தினர் இந்த 11 நாடுகளை சேர்ந்தவர்களாக இருந்தனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டிரம்ப் அரசாங்கம், தடை விதித்தப் பிறகு, இந்த 11 நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்கள் வெறும் 23 பேர் தான் என்கிறது ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம்.

அந்த 23 நபர்களும் ஒரு சட்ட அனுமதிக்குப் பின்தான் உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள். -BBC_Tamil