சிரியாவில் குர்திஷ்களால் கட்டுப்படுத்தப்படும் பகுதிகளில் ஒன்றான அஃப்ரின் மீதான துருக்கியின் தாக்குதல்கள், தொடர்ந்து வருகின்றன. இதன் காரணமாக, உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.
இம்மாதம் 20ஆம் திகதி ஆரம்பித்த இந்தத் தாக்குதல்கள், தொடர்ந்தும் உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் நிலையில், அதில் உயிரிழந்த குர்திஷ்களின் (போராளிகளும் மக்களும்) மரண வீடுகளில் ஒரு தொகுதி, நேற்று முன்தினம் (29) இடம்பெற்றது.
அஃப்ரினின் பிரதான வைத்தியசாலையைத் தாண்டி, 24 சடலங்கள் கொண்டு செல்லப்பட்டு, இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. அங்கு கூடியிருந்த மக்களும் போராளிகளும், தமது கோபத்தையும் வெளிப்படுத்தினர்.
அஃப்ரினின் வடக்கு, மேற்குப் பகுதிகள் மீதான, துருக்கியின் விமானத் தாக்குதல்களும் ஆட்லறி குண்டுத் தாக்குதல்களும், நேற்று முன்தினமும் தொடர்ந்தன என, மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் உறுதிப்படுத்தியது. அத்தோடு, பல முனைகளிலும் மோதல் அதிகரித்துள்ளது என, கண்காணிப்பகம் தெரிவித்தது.
துருக்கி இராணுவத்தினரும் துருக்கிக்கு ஆதரவான ஆயுததாரிகளும், எல்லைக்கு அருகிலுள்ள 8 பகுதிகளை, இதுவரை கைப்பற்றியுள்ளனர் என, கண்காணிப்பகம் மேலும் தெரிவிக்கிறது.
இத்தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், 55 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என, கண்காணிப்பகம் குறிப்பிடுகின்ற போதிலும், துருக்கி அதை மறுக்கிறது. பொதுமக்களின் உயிரிழப்புகளைத் தடுக்க, தம்மாலான முயற்சிகளை எடுப்பதாகவும் அந்நாடு குறிப்பிடுகிறது. எனினும், மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம், ஓரளவு உறுதியான தகவல்களை வழங்குவதற்காக அறியப்பட்டதாகும்.
அதேபோன்று, இந்த மோதல்களின் விளைவாக, குர்திஷ் ஆயுததாரிகளில் 78 பேரும், துருக்கிக்கு ஆதரவான ஆயுததாரிகளில் 76 பேரும் கொல்லப்பட்டனர் என, கண்காணிப்பகம் குறிப்பிடுகிறது. துருக்கித் தரப்போ, இந்நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட பின்னர், “597 பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிடுகிறது. பயங்கரவாதிகள் என, குர்திஷ் ஆயுததாரிகளையே, துருக்கி அழைக்கிறது.
துருக்கியின் இந்த இராணுவ நடவடிக்கை காரணமாக, சிரியப் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக, ரஷ்யாவின் சொச்சியில் நேற்று (30) இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில், குர்திஷ்கள் கலந்துகொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. -BBC_Tamil