சவுதியில் ஊழல் செய்த அரச குடும்பங்களைச் சேர்ந்தவர்களிடம் இருந்து 107 பில்லியன் டாலர்கள் மீட்பு

ரியாத்

எண்ணெய் உற்பத்தியில் முன்னணி நாடாக திகழும் சவுதி அரேபியாவின் 32 வயது பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ‘தொலைநோக்கு 2030’ என்னும் புதிய திட்டத்தை முன் வைத்து சமூக மற்றும் பொருளாதார கொள்கைகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடும் சவுதி அரேபிய அரச குடும்ப நிறுவனங்களில் அதிக அளவில் ஊழல் நடைபெறுவது கடந்த நவம்பர் மாதம் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக   இளவரசர் அல் வாலித் பின் தலால் உள்பட 400-க்கும் மேற்பட்டோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இதில் சந்தேகத்துக்கு இடமான 381 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் பெரும்பாலான அரச குடும்பத்தினர் தாங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து அரசாங்கத்துக்கு வரவேண்டிய 107 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான அரச குடும்பங்களைச் சேர்ந்த மேலும் 56 பேரிடம் இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தகவலை அந்நாட்டின் அட்டார்னி ஜெனரல் ஷேக் சாவ்த் அல்-மொஜெப் தெரிவித்தார்.

-dailythanthi.com