பாரிய புதைகுழிகளில் 400 சடலங்கள்?

பல நூற்றுக்கணக்கான றோகிஞ்சா முஸ்லிம்கள் கொல்லப்பட்டு, 5 பாரிய புதைகுழிகளில் புதைக்கப்பட்டுள்ளனர் என, ஏ.பி செய்தி முகவராண்மை வெளியிட்டுள்ள புலனாய்வுச் செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று (01) வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், இத்தாக்குதல்களிலிருந்து தப்பியவர்கள், பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் என சுமார் 25 பேர், தாக்குதல்களின் பின்னராக எடுக்கப்பட்ட காணொளிகள் என்பன, ஆதாரங்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுவரை எடுக்கப்பட்டுள்ள கருதுகோள்களின்படி, மியான்மார் இராணுவத்தினரால், சுமார் 400 றோகிஞ்சா முஸ்லிம்கள் இவ்வாறு கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது.

இதில் ஒரு படுகொலையில், ஆண்கள் சிலர், கால்பந்தாட்டம் போன்ற விளையாட்டான சின்லோன் விளையாட்டை விளையாடுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்த போது, படையினரால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகினர்.

அதில், நூர் காதிர் என்பவர் தப்பினாலும், தன்னுடைய 6 நண்பர்கள் கொல்லப்பட்டனர் எனவும், இரண்டு வெவ்வேறான புதைகுழிகளில் தனது நண்பர்களைக் கண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

செய்தி முகவராண்மைக்குக் கிடைத்த காணொளி ஆதாரத்தின்படி, சடலங்களின் மேல் அமிலம் ஊற்றப்பட்டிருக்கிறது எனக் கூறப்படுகிறது.

மியான்மார் இராணுவம், தங்களில் சிலரால் கைதுசெய்யப்பட்ட 10 பேர், கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டனர் என்ற உண்மையை, கடந்தாண்டு டிசெம்பரில் ஒத்துக் கொண்டது. ஆனால் கொல்லப்பட்டவர்கள், “பயங்கரவாதிகள்” என்றே அந்நாடு குறிப்பிடுகிறது.

மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில், படையினர் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, படையினரால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் காரணமாக, கடந்தாண்டு ஓகஸ்ட்டுக்குப் பின்னர், 688,000 றோகிஞ்சாக்கள், பங்களாதேஷுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் அநேகமானோர், தங்களுக்கு அல்லது தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு, வன்முறைகள், சித்திரவதைகள், துன்புறுத்தல்கள், வன்புணர்வுகள், அல்லது கொலைகள் இடம்பெற்றன எனக் குறிப்பிடுகின்றனர். அவர்களின் குற்றச்சாட்டுகளை, மியான்மார் மறுக்கிறது.

-tamilmirror.lk