அனுமதி இல்லாமல் ஒன்று கூடுவதை சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை

போலீஸ் அனுமதி இல்லாமல் அமைதியாக ஒன்று கூடுவதை அனுமதிக்கும் சட்டத்தை மலேசியப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறார்.

அந்தத் தகவலைப் சட்டத் துறைக்குப் பொறுப்பான பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் இன்று வெளியிட்டார்.

நஜிப், அமைதியான கூட்ட மசோதாவை முன்மொழிவார் என ஊடகம் ஒன்றிடம் அவர் தெரிவித்தார். பொதுத் தேர்தலுக்கு முன்னதாக  சிவில் சமூக உரிமைகளை மேம்படுத்தும் முயற்சியாக அந்த நடவடிக்கை தோன்றுகிறது.

கொடூரமான சட்டங்களுக்குப் பதில் அமைதியாக ஒன்று கூடுவதற்கு வகை செய்யும் புதிய சட்டத்தை அறிமுகம் செய்யப் போவதாக கடந்த செப்டம்பர் மாதம் நஜிப் யாரும் எதிர்பாராத வகையில் அறிவித்தார்.

“பிரதமர் நஜிப் ரசாக் இந்த வாரம் அதனைச் சமர்பிப்பார். ஆனால் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை,” என நஸ்ரி சொன்னதாக நியூ ஸ்டெரெயிட்ஸ் டைம்ஸ் நாளேடு முதல் பக்கச் செய்தியாக வெளியிட்டுள்ளது.

“அனுமதி இல்லாமல் அமைதியாக ஒன்று கூடுவதற்கு” அந்த புதிய மசோதா அனுமதி அளிக்கும் என்றும் அந்த ஏடு குறிப்பிட்டது.

அந்த ஏற்பாடு அரங்குகள் போன்ற குறிப்பிட்ட இடங்களுக்கு பொருந்தும் என அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி அது கூறியது.

மலேசியாவின் கடுமையான பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு ஒன்று கூட வேண்டுமானால் போலீஸ் அனுமதி தேவை.

கடந்த மாதம் நஜிப் இரண்டு பாதுகாப்புச் சட்டங்களை ரத்துச் செய்து அவற்றின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 125 பேரை விடுவித்தார். அரசாங்கத்தை எதிர்ப்பவர்களை விசாரணையின்றி தடுத்து வைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் போன்ற சர்வாதிகார சட்டங்களை ரத்துச் செய்யப் போவதாக அல்லது தளர்த்தப் போவதாக தாம் அளித்த வாக்குறுதிக்கு முதற்படியாக அவர் அதனைத் செய்தார்.

தேர்தல் சீர்திருத்தங்களைக் கோரி கடந்த ஜுலை மாதம் கோலாலம்பூர் சாலைகளில் நடத்தப்பட்ட பேரணியை ஒடுக்குவதற்கு போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளையும் நீரையும் பயன்படுத்தியது கடுமையாக குறைகூறப்பட்ட பின்னர் நஜி, சிவில் உரிமைகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்.

என்றாலும் தீவிரவாதக் கும்பல் ஒன்றுக்கு புத்துயிரூட்ட முயன்றதாக கூறப்பட்ட ஆறு அந்நியர்கள் உட்பட 13 பேர் கடந்த வாரம் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்(இசா) கீழ் தடுத்து வைக்கப்பட்டனர். அதனால் அந்தச் சட்டத்தை ரத்துச் செய்யும் வாக்குறுதியை நஜிப் மீறி விட்டதாக அவரது அரசியல் எதிரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால் அடுத்த ஆண்டு இசா சட்டத்துக்கு மாற்றும் சட்டம் சமர்பிக்கப்படும் வரையில் தீவிரவாதிகளைத் தடுத்து வைப்பதற்கு வேறு சட்டம் ஏதும் இல்லை என அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

1957ம் ஆண்டு மலேசியா சுதந்திரம் பெற்றது முதல் இப்போது நஜிப் தலைமையில் இயங்கும் மலாய் ஆதிக்கம் பெற்ற ஆளும் கூட்டணி ஆட்சி புரிந்து வருகிறது. முஸ்லிம்களையும் பெரும்பான்மையாகக் கொண்ட ஆனால் பல இன மக்கள் வாழ்கின்ற அந்த நாட்டில் ஒழுங்கை நிலை நிறுத்த அந்தக் கூட்டணி கடுமையான சட்டங்களை பயன்படுத்தி வந்துள்ளது.

ஆனால் அந்தச் சட்டங்களை எதிர்ப்பாளர்கள் கடுமையாகக் குறை கூறி வருகின்றனர். அந்தச் சட்டங்கள் மனிதநேயமற்றவை என்றும் சட்டப்பூர்வமான எதிர்ப்பை ஒடுக்குவதற்கு அரசாங்கம் அவற்றைப் பயன்படுத்தும் சாத்தியம் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

ஏஎப்பி