தன் மீது விதிக்கப்பட்ட சர்வதேசத் தடைகளை மீறி வடகொரியா சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 1,300 கோடி ரூபாய்) அளவுக்கு வருவாய் ஈட்டியுள்ளதாக ஐ.நா பாதுகாப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சீனா, ரஷ்யா, மலேசியா உள்ளிட்ட பல நாடுகள் வடகொரியாவில் இருந்து வந்த சட்டவிரோத இறக்குமதிகளைத் தடுக்கத் தவறிவிட்டதாக அந்த ரகசிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளால் வடகொரியா மீது ஐ.நா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆகியன பல தடைகளை விதித்தன.
ஜனவரி 2017 முதல் செப்டம்பர் 2017 வரையிலான காலகட்டத்தில் தடை செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தையும் வடகொரியா தொடர்ச்சியாக ஏற்றுமதி செய்து வந்தது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வடகொரியாவுக்கு பெட்ரோலியப் பொருட்களை வழங்கியதற்காக, பல சர்வதேச எண்ணெய் நிறுவனங்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
பல சட்டவிரோத மற்றும் ஏமாற்று உத்திகளை பயன்படுத்தி சீனா, தென்கொரியா, வியட்நாம், மலேசியா. ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு வடகொரியாவில் இருந்து நிலக்கரி ஏற்றுமதி செய்யப்பட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது.
ஐ.நா பாதுகாப்பு அவை விதித்த தடைகளை தாங்கள் மீறவில்லை என்றும், வழக்காமான வர்த்தகப் பரிமாற்றங்களையே மேற்கொண்டதாகவும் வடகொரியாவில் உள்ள சீனத் தூதரகம் கூறியுள்ளது.
சிரியாவின் ரசாயன ஆயுதத் திட்டத்தை மேற்பார்வையிடும் நிறுவனத்துக்கு, 2012 முதல் 2017 வரையான காலகட்டத்தில் வடகொரியாவில் இருந்து 40 முறை கப்பலில் சரக்குகள் அனுப்பப்பட்டதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. தங்கள் நாட்டிலுள்ள வடகொரிய வல்லுநர்களே அத்திட்டத்தில் பங்குபெற்றதாக சிரியா கூறியுள்ளது.
வடகொரியாவுடன் எவ்விதமான ஆயுத பரிவர்த்தனையும் இல்லையென்று ஐ.நாவுக்கான மியான்மர் தூதரும் மறுத்துள்ளார்.
வடகொரியா மீதான தடைகள் எவை?
சீனாவுடன் வடகொரியா நிலக்கரி, கனிமத் தாது உள்ளிட்ட வர்த்தகத்தில் ஈடுபட ஐ.நா தடை விதித்துள்ளது.
வடகொரியாவின் அணு ஆயுத திட்டத்துடன் தொடர்புடைய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மீது பயணத் தடை, சொத்துகள் முடக்கம் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த டிசம்பரில் வடகொரியா மீது விதிக்கப்பட்ட ஒரு தடையால் அந்நாட்டுக்கு 90% பெட்ரோலிய இறக்குமதி பாதிக்கும் என்று கணிக்கப்பட்டது.
வெளிநாடுகளில் பணியாற்றும் வடகொரியர்களை 24 மணிநேரத்துக்குள் நாடு திரும்ப அப்போது அறிவுறுத்தப்பட்டது.
வடகொரியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்னணு சாதனங்கள் மற்றும் இயந்திரங்களை ஏற்றுமதி செய்யவும் தடை உள்ளது. -BBC_Tamil