சிரியாவில் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்யப் போர் விமானம்

சிரியாவின் இட்லிப் மாகாணத்தின் வடமேற்குப்பகுதியில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பறந்த ரஷ்யாவின் சுகோய்-25 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

ஹயத் தஹ்ரிர் அல் ஷாம் என்ற ஜிகாதிகள் கூட்டணியின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியாக கருதப்படும் இடத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்த விமானி குதித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால், விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதிலிருந்து தப்பித்த விமானி பிறகு தரைப்பகுதியில் நடந்த சண்டையில் உயிரிழந்ததாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னர் அல்கொய்தா தீவிரவாதிகள் இயக்கத்துடன் இணைந்திருந்த ஹயத் தஹ்ரிர் அல் ஷாம் அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

ரஷ்ய விமானப்படையின் ஆதரவுடன் சிரியா அரசாங்கம் கடந்த டிசம்பர் மாதம் இட்லிப் மாகாணத்தில் கிளர்ச்சி குழுக்களுக்கு எதிராக பெரும் தாக்குதலைத் தொடுத்தது.

தாக்குதல் யாரால், எப்படி நடத்தப்பட்டது?

தரையில் உள்ள இலக்குகளை நோக்கி தாக்குதலை நடத்தவல்ல ரஷ்யாவின் சுகோய்-25 ரக விமானங்கள் இட்லிப் மாகாணத்தின் மாஸ்ரன் நகரத்தில் தாக்குதல் தொடுத்து வந்தது.

கடந்த 24 மணிநேரத்தில் பல டஜன் விமானத் தாக்குதல்களை அப்பகுதியில் ரஷ்யா மேற்கொண்டதாக கண்காணிப்பு குழுக்கள் தெரிவிக்கின்றன.

ஹயத் தஹ்ரிர் அல் ஷாம் என்ற தீவிரவாத இயக்கம் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய காணொளி விமானம் சுடப்பட்டவுடன் கீழே விழுவதற்கு முன் பற்றி எரிவதை காட்டுகிறது.

“வீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்து எகிறும் கருவி உதவியோடு குதித்த விமானிக்கு தான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் இருப்பதாக தெரிவிப்பதற்கு போதிய நேரமிருந்தது” என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“தீவிரவாதிகளுடனான சண்டையில் விமானி கொல்லப்பட்டார்” என்று அது மேலும் குறிப்பிட்டுள்ளது.

இந்த அரிதான தாக்குதல் குறித்து என்ன சொல்கிறது ரஷ்யா?

சிரியாவிலுள்ள தீவிரவாதிகள் முகாம்களின் மீதான தனது தாக்குதலை கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவக்கிய ரஷ்யா இதுவரை தொடர்ந்து நடத்தி வருகிறது. ஆனால், கடந்த 2016ஆம் ஆண்டு ரஷ்ய ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதை தவிர வேறெந்த இழப்புகளும் ஏற்பட்டதில்லை.

எனவே, அரிதான இந்த தாக்குதலினால் உயிரிழந்த விமானியின் உடலை மீட்டெடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இட்லிப் மாகாணத்தில் என்ன நடந்துக் கொண்டிருக்கிறது?

துருக்கி, ரஷ்யா மற்றும் இரானின் ஒப்புதலுடன் இது ஒரு “பதற்றதை தணிப்பதற்கான” பகுதியாக கருதப்படுகிறது. ஆனால், கடந்த நவம்பர் மாதம் மீண்டும் அதிகரித்த சண்டையினால் சிரியா அரசாங்கம் அங்கு டிசம்பர் மாதத்தில் பெரும் தாக்குதலைத் தொடுத்தது.

ஹயத் தஹ்ரிர் அல் ஷாம் அப்பகுதியுள்ள முக்கிய தீவிரவாத இயக்கமாகக் கருதப்படுகிறது.

இந்த சண்டையின் காரணமாக கிட்டதட்ட 1 லட்சம்மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது. -BBC_Tamil